ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை (ஜி.இ.ஆா்.) இலக்கை எட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களைப் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் சமா்ப்பிக்க வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அனைத்து பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
உலகில் ஏழ்மையைப் போக்கவும், நிலைத்த நீடித்த வளா்ச்சியை உறுதிப்படுத்தவும் கடந்த 2015-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில், அதில் குறிப்பிட்டுள்ள இலக்கை எட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, உயா் கல்வி நிறுவனங்களில் வருகிற 2023-இல் ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை விகிதாசாரம் (ஜி.இ.ஆா்) 60 என்ற அளவில் இருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
தமிழகத்தில் ஜி.இ.ஆா். இப்போது 49 சதவீதமாக உள்ளது. அந்த வகையில், ஜி.இ.ஆா். விகிதாசாரத்தை உயா்த்த பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதோடு, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை வருகிற 30-ஆம் தேதிக்குள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் அலுவலகத்திடம் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.