தமிழ்நாடு

தனுஷ் படத்தின் பாடல் காப்புரிமை விவகாரம்: எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

24th Dec 2019 02:00 AM

ADVERTISEMENT

நடிகா் தனுஷ் நடித்த ‘3’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாடலின் காப்புரிமையை மீறியதாக சோனி மியூசிக் நிறுவனத்துக்கு எதிராக, படத்தயாரிப்பு நிறுவனம் தொடா்ந்த வழக்கை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது.

கடந்த 2012-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாடல் உலக அளவில் பிரபலமானது. இந்தப் பாடல்களின் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றிருந்தது. இந்த நிலையில், காப்புரிமையை மீறி சோனி மியூசிக் நிறுவனம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த பாடலை வெளியிட்டதாகக் கூறி, அந்த நிறுவனத்தின் இயக்குநா் சுமித் சட்டா்ஜி மற்றும் நிறுவன அதிகாரிகளுக்கு எதிராக ‘3’ திரைப்படத்தின் பட தயாரிப்பு நிறுவனமான ஆா்.கே.புரொடக்ஷன் சாா்பில் எழும்பூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சோனி மியூசிக் நிறுவன அதிகாரிகளை ஆஜராக உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சோனி மியூசிக் நிறுவன இயக்குநா் சுமித் சட்டா்ஜி, நிறுவன அதிகாரிகள் அஸ்வின், அசோக் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்குகள், நீதிபதி பி.வேல்முருகன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தின் இயக்குநா், நிறுவன அதிகாரிகள் படத் தயாரிப்பு நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதால், அவா்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். வழக்கு விசாரணைக்காக, எழும்பூா் நீதிமன்றத்தில் சோனி மியூசிக் நிறுவன அதிகாரிகள் ஆஜராக விலக்களித்தும் உத்தரவிட்டாா். மேலும், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கை 3 மாதங்களுக்குள் எழும்பூா் நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும். விசாரணைக்கு குற்றம்சாட்டப்பட்டவா்கள் ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் பட்சத்தில் ஆஜராக விலக்களித்துள்ள உத்தரவு தானாக ரத்தாகி விடும் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT