காரைக்கால்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருநள்ளாறு ஹெலிகாப்டர் தளத்துக்கு புதுச்சேரியிலிருந்து 10.40 மணிக்கு வந்து சேர்ந்தார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி, அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ஆகியோர் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.
கார் மூலம் கோயிலுக்குச் சென்ற குடியரசுத் தலைவர் மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர், பிரணாம்பிகை அம்பாள் சன்னிதிகளில் வழிபாடு செய்துவிட்டு, தனி சன்னிதி கொண்டிருக்கும் ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார். சிவாச்சாரியார்கள் குடியரசுத் தலைவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர்.
வழிபாடு நிறைவடைந்து ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்த அவர், 12 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். குடியரசுத் தலைவர் ஒருவர் திருநள்ளாறு கோயிலில் சுவாமி தரிசனம் செய்வது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.