தமிழ்நாடு

கிறித்துமஸ் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து

24th Dec 2019 10:59 AM

ADVERTISEMENT

கிறித்துமஸ் திருநாளை முன்னிட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் ராகிறித்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களால் உணர்வுடனும் உற்சாகப் பெருக்குடனும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருவிழா கருணை மிக்க தியாக வாழ்வைக் கொண்ட இயேசுநாதரின் பிறப்பினைக் குறிப்பதாகும். பிறருக்குத் துன்பம் ஏற்படுத்தாமல், பிறர் தவறுகளையும் தன் மீது சுமந்துகொண்ட பெருமகனாக இயேசுநாதரின் வாழ்க்கை அமைந்திருந்ததை வரலாற்றில் காண்கிறோம்.

அன்பும் அமைதியும் மிக்க வாழ்க்கை அனைவருக்கும் வாய்த்திட வேண்டும் என்பதே கிறிஸ்துமஸ் திருவிழாவின் நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேறிட, தி.மு.கழகம் என்றும் கிறிஸ்தவ சமுதாய மக்களுக்குத் துணை நிற்கும் என்ற உறுதியுடன் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
வாழ்க்கைப் பாடங்கள் அனைத்தையும் உலகிற்கு போதித்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

‘நண்பர்களிடம் மட்டும் அன்பு காட்டினால் போதாது. எதிரிகளிடமும் அன்பு காட்ட வேண்டும். மனதார மன்னிக்க வேண்டும். யாராவது உங்கள்மேல் கோபமாக இருந்தால், உடனடியாக அவரிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்றவர்கள் உங்களிடம்  எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதேபோல் நீங்கள் அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டுமென போதித்தவர் இயேசுபிரான்.

இயேசுபிரான் பிறந்த இடம் ஏழ்மையின் அடையாளம் என்றாலும் கூட, பின்னாளி அவர் போதித்த  போதனைகளும், அவரது வாழ்க்கை நமக்கு உணர்த்திய பாடங்களும் உயர்வின் உச்சங்கள் ஆகும். தமது போதனைகளுக்கு தாமே எடுத்துக்காட்டாக தமது வாழ்க்கையை வாழ்ந்த மகான் இயேசுநாதர்.

இயேசுபிரானின் போதனைகளுக்கு நிகழ்கால உதாரணமாக வாழ்வது தான் அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும். நாட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்; போட்டி பொறாமைகள் அகல வேண்டும்; ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் ஆகும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில்  அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
கருணையின் வடிவமான இயேசுபிரானின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ
பெருமக்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் மற்றவரிடமிருந்து எதை எதிர்பார்க்கிறோமோ அதையே மற்றவர்களுக்கு நாமும் செய்ய வேண்டும் என்ற ஒவ்வொரு மனிதருக்கும்
அடிப்படையான, அற்புதமான போதனையை வழங்கியவர் இயேசுநாதர்.
எண்ணிலடங்காத துன்பங்களையும், துயரங்களையும் தாங்கிய போதும் அன்புதான் உலகின் ஆகப் பெரிய சக்தி என்பதை நிரூபித்தவர். அதன்
வழியாகவே மனங்களை வென்றெடுத்தவர். தன்னையே காட்டிக்கொடுத்த துரோகியைக் கூட சிநேகிதன் எனக் கூறிய பெருந்தன்மையாளர். அப்படிப்பட்ட
அருளாளரின் நல்வார்த்தைகள் அத்தனை மனிதர்களுக்குமான கலங்கரை விளக்கமாக அமைந்திருக்கின்றன.
மனித வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்று விட்டால், இந்த உலகில் முடியாதது எதுவுமில்லை என்ற அவரது சொற்கள் எத்தகைய
சூழலிலும் உற்சாகத்தைத் தருபவை. புதிய லட்சியங்களை விதைத்து, வளர்த்தெடுக்கும் சக்தி அளிப்பவை.
அடுத்தவனை நேசி; உன் எதிரியிடமும் அன்பு காட்டு; உன்னைச் சபிப்பவர்களையும் ஆசீர்வாதம் செய்; உன்னை வெறுப்பவருக்கும் உதவி செய்;
உன்னை அவமதிப்பவர்களையும் போற்று என அன்பையும் பொறுமையையும் மனித சமுதாயத்திற்கு போதித்த இயேசு பெருமான் வழியில் அனைவரையும்
அன்போடு நடத்தி, மகிழ்ச்சியோடு வாழ்ந்திட கிறிஸ்துமஸ் திருநாள் வழிவகுக்கட்டும். இந்த சிறப்பான நாளில் உலகமெங்கும் அமைதியும் நல்லிணக்கமும் தழைக்கட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
அன்பையும், கருணையையும் உலகிற்கு போதித்த இயேசுபிரான் பிறந்த நாளை கிறித்துமஸ் விழாவாகக் கொண்டாடும் கிறித்துவ சொந்தங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் இயேசுபிரான் அன்பு காட்டினார். உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று  விரும்பினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். தமது வாழ்நாளின் கடைசி நொடி வரை அன்பையும், கருணையையும் காட்டியது மட்டுமின்றி, எதிரிகளுக்கு மன்னிப்பையும் வழங்கினார்.

ஆண்டு தோறும் கிறித்துமஸ் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே இயேசுநாதர் காட்டிய வழியில், இருப்பவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு கொடையளிப்பது தான். இயேசுநாதரின் இந்த ஒற்றை நோக்கத்தை விட சிறந்த பொதுவுடைமைக் கொள்கை இந்த உலகில் இருக்க முடியாது.

ஆகவே, இயேசு பிறந்த இந்த நன்னாளில் இல்லாதவர்களுக்கு அனைத்து வகைகளிலும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். இந்த உலகில் இயேசு விரும்பிய அமைதி, கருணை, வளம், ஒற்றுமை,  மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் பெருகுவதற்காக உழைக்க நாம் உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளர். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT