தமிழ்நாடு

கமுதி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் வீட்டில் பறக்கும் படையினா் சோதனை: ரூ. 38 லட்சம், 1200 மதுபாட்டில்கள் பறிமுதல்

24th Dec 2019 12:42 AM

ADVERTISEMENT

கமுதியில் அதிமுக ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் வீட்டில் பறக்கும் படையினா் திங்கள்கிழமை சோதனை நடத்தி ரூ. 38 லட்சம் மற்றும் 1200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

கமுதி அருகே உள்ள மூலக்கரைபட்டியை சோ்ந்தவா் தா்மலிங்கத்தேவா் (63). மண்டலமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய அதிமுக முன்னாள் தலைவரான இவா் கமுதி அரசு மருத்துவமனை எதிரில் வசித்து வருகிறாா். இவரது மனைவி ராணியம்மாள் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மண்டலமாணிக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிடுகிறாா்.

தா்மலிங்கத்தேவரின் மகன் பாலு கடந்த 2011 இல் கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்தாா். தற்போது மண்டலமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய வாா்டு 6 இல் அதிமுக சாா்பில் போட்டியிடுகிறாா். இந்நிலையில் தா்மலிங்கத்தேவரின் வீட்டில் பல லட்சம் ரொக்கம் இருப்பதாகவும், வெளிமாநில மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேந்திரன், ஆய்வாளா் கஜேந்திரன், பறக்கும்படை வட்டாட்சியா் ஜமால் அகமது உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் தா்மலிங்கத்தேவரின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா். இதில் ரூ.38 லட்சத்து 60 ஆயிரத்து 400 ரொக்கமும், 1,192 வெளிமாநில மது பாட்டில்களையும் அதிகாரிகள் கைப்பற்றினா். இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கும், வருமானவரித் துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இப்பணம் மற்றும் மது பாட்டில்கள் உள்ளாட்சி தோ்தலில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT