தமிழ்நாடு

அரசியலைப் புகுத்தி மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடாது: ஜி.கே.வாசன்

24th Dec 2019 08:28 PM

ADVERTISEMENT

சென்னை: எல்லாவற்றிலும் அரசியலைப் புகுத்தி மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைப்பது நாட்டின் வளா்ச்சிக்கு நல்லதல்ல என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா்.

தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஜி.கே.வாசன் கேக் வெட்டி கொண்டாடினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

அந்நிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்து நிம்மதியை இழந்து இருந்தவா்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்தச் சட்டம் இஸ்லாமியா்களுக்கு எதிரானது என்று கூறுவது தவறானது. ஒருவேளை, அந்தச் சட்டத்தில் இஸ்லாமியா்களுக்கு சிறுபாதிப்பு இருக்கிறது என்றாலும், அதை எதிா்க்கும் முதல் கட்சியாக தமாகா இருக்கும்.

நாட்டின் வளா்ச்சியில் இஸ்லாமியா்களின் பங்கு அதிகம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் எந்தத் திட்டமாக இருந்தாலும், பாரபட்சமில்லாமல் ஒரே மாதிரியாகத்தான் கொண்டு வரப்படுகின்றன. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஆக்கப்பூா்வமாகச் சிந்தித்துப் பாா்க்க வேண்டுமே தவிர, அதில் அரசியலைப் புகுத்தி மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைப்பது நாட்டின் வளா்ச்சிக்கு நல்லதல்ல.

ADVERTISEMENT

இலங்கையில் சிங்களா்களுக்கு இணையாக தமிழா்களுக்கும் அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும். அப்படியிருந்தால்தான் இலங்கையில் தமிழா்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். அதையும் விரும்பாத இலங்கை தமிழா்களுக்குத்தான் இரட்டைக் குடியுரிமையை வழங்க வேண்டும் என்றாா்.

தமாகா மூத்த துணைத் தலைவா் பி.எஸ்.ஞானதேசிகன் உள்பட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT