தமிழ்நாடு

மாயவலையில் அடித்தட்டு மக்கள்: இணையவழி லாட்டரி மோகம்

23rd Dec 2019 02:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம்: தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டு பல ஆண்டுகளாகியும், 3 எண்கள் (மூன்று நம்பர்) என்னும் இணைய வழி லாட்டரி மூலம் ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
 தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை லாட்டரி சீட்டுத் தொழில் கொடி கட்டிப் பறந்தது. ஒரே இரவில் கோடீஸ்வரராகும், லட்சாதிபதியாகும் வாய்ப்பு கிட்டும் என்பதால் மக்கள் மத்தியில் லாட்டரி தனிக் கவனம் பெற்றது. இதை சாதகமாக்கி, அச்சிடப்பட்ட பல வகை லாட்டரிகள், சுரண்டல் லாட்டரி தமிழகத்தில் அதிகளவில் நுழைந்தன. எனினும், லாட்டரி சீட்டுகளை வாங்கியவர்களில் பெரும்பாலானோர் தங்களது பணத்தை இழந்து, கடனாளிகளாகி குடும்பம் நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதனால், தற்கொலைச் சம்பவங்களும் தொடர்ந்தன.
 இதை கருத்தில் கொண்டு கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்தார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து, லாட்டரித் தொழிலில் கோலோச்சி இருந்த முக்கியப் பிரமுகர்கள் வெளி மாநிலங்களிலிருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து மறைமுகமாக விற்பனை செய்யத் தொடங்கினர். எனினும், காவல் துறையின் தீவிர கண்காணிப்பு, கடும் நடவடிக்கையால் இத்தொழிலை முழுமையாகச் செய்ய முடியவில்லை.
 மூன்று நம்பர் லாட்டரி
 இந்த நிலையில்தான், 3 நம்பர் என்னும் 3 இலக்க எண்களைக் கொண்ட இணைய வழி லாட்டரி அறிமுகமானது. இது அச்சிட்ட லாட்டரி அல்ல. ஆனால், லாட்டரியை வாங்கியது போன்று, எண்களைக் கொண்டு நடைபெறும் விற்பனை முறை. அதாவது, பழைய முறையில் லாட்டரி சீட்டை வாங்கினால், பரிசு விழுந்த எண்ணுக்குரிய சீட்டை காண்பித்து பரிசுத் தொகையைப் பெறலாம்.
 ஆனால், இந்தப் புதிய முறை முற்றிலும் கற்பனையானது. லாட்டரி சீட்டை விற்பனை செய்வது போலவும், அதை வாடிக்கையாளர்கள் வாங்குவதும் போலவும் இருக்கும். அதாவது, "000' முதல் "999' வரையான வரிசை எண்களை வாங்கலாம்.
 ஒரே எண்ணை 100 எண்ணிக்கையில் (இதை "சேம்' என்பர்) வாங்க முடியும். அதாவது, 546 என்ற ஒரு எண்ணை 100 எண்ணிக்கையில் வாங்கலாம்.
 இவை மொத்தம் ஒரு லட்சம் சீட்டுகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். வாடிக்கையாளர்களால் பணம் கொடுத்து வாங்கப்படும் எண்களை விற்பனைப் பிரதிநிதி ஒரு சீட்டில் குறித்துக் கொடுப்பார்.
 தற்போது, லாட்டரி எண்கள் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப்) மூலம் வாடிக்கையாளர்களின் செல்லிடப்பேசிக்கே அனுப்பப்படுகிறது.
 இதுவே, வாடிக்கையாளர் லாட்டரி வாங்கியதற்கான ஆதாரம்.
 கோடிகள் புழங்கும் தொழில்
 இந்த லாட்டரி எண் ரூ.30, ரூ.50 என இரு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகை லாட்டரிகளை விற்பனை செய்ய ஊருக்கு 10 குழுக்கள் வீதம் என்ற வகையில் இருக்கும். ஒவ்வொரு குழுவும் மொத்தம் ஒரு லட்சம் எண்ணிக்கையில் லாட்டரியை விற்பனை செய்யும்.
 இந்த வகையில் ரூ.30 விலையுள்ள லாட்டரி எண் மூலம் ரூ.3 கோடியும், ரூ.50 விலையுள்ள லாட்டரி எண் மூலம் ரூ.5 கோடியும் விற்பனை நடைபெறும்.
 பரிசுத் தொகை
 பரிசு அறிவிக்கப்பட்ட 3 இலக்க எண் கொண்ட ஒரு சீட்டுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும். அதே எண்ணில், வாடிக்கையாளர்கள் 100 சீட்டுகள் வாங்கியிருந்தால் மொத்த பரிசுத் தொகையாக ரூ.15 லட்சம் கிடைக்கும்.
 இதேபோல, பரிசு அறிவிக்கப்பட்ட மூன்று எண்ணில் கடைசி இரு எண்கள் சரியாக இருந்தால், ரூ.500-வீதமும், கடைசி ஒரு எண் சரியாக இருந்தால் ரூ.50-வீதமும் பரிசாக வழங்கப்படும்.
 குறிவைக்கும் கும்பல்
 இந்த வகை லாட்டரியை விற்பனை செய்ய ஒவ்வோர் ஊருக்கும் ஒரு குழு வீதம் செயல்படுகிறது. இந்தக் குழுக்கள் அனைத்தும் ஒரு தலைமையின் கீழ் இயங்குகிறது. இந்தக் குழுக்கள் மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரையில் வரையறுக்கப்பட்ட கிளை வடிவத்தில் பரவியிருக்கின்றன. இவர்கள் மறைமுகமாகவே செயல்படுவர்.
 ஏழை கூலித் தொழிலாளர்கள், அடிமட்ட மக்கள், சுலபமாக பணம் சம்பாதிக்க விருப்பமுள்ளவர்கள் ஆகியோரை குறிவைத்து விற்பனை பரிவர்த்தனையை செய்வர்.
 எனினும், நன்கு அறிமுகமான நபர்களால் மட்டுமே லாட்டரி எண்களை விற்கவும், வாங்கவும் முடியும். இதனால், விற்பனை சீராக நடைபெறுவதுடன், அது குறித்த ரகசியமும் காக்கப்படும். இந்த லாட்டரியை காலையிலிருந்து பிற்பகல் 1.30 மணி வரை வாங்கலாம்.
 பரிசு அறிவிக்கும் நுட்பம்
 கேரளத்தில் அரசு அனுமதியுடன் அன்றாடம் நடைபெறும் லாட்டரி குலுக்கலுக்கான 6 இலக்க பரிசு எண்களில் கடைசி 3 இலக்க எண்களை, தங்களது இணைய வழி லாட்டரிக்கான பரிசு எண்களாக அறிவிக்கிறது இங்குள்ள குழுக்கள். கேரளத்தில், பிற்பகல் 3 மணிக்கு பரிசு எண்கள் அறிவிக்கப்படும் போது, இங்கும் அந்த பரிசு எண்ணை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
 தேடி வரும் பரிசுத் தொகை
 பரிசு விழுந்ததும், லாட்டரி வாங்கிய வாடிக்கையாளர் வியாபாரியிடம் நேரில் சென்று பரிசுத் தொகையைப் பெறலாம். இரவு வரையில் பரிசுத் தொகையை பெற வாடிக்கையாளர் வரவில்லை என்றால், இரவு 7 மணியளவில் வியாபாரியே வாடிக்கையாளரின் வீட்டுக்கு தேடிச் சென்று பரிசுத் தொகையை வழங்கி விடுவார்.
 அதேபோல, ஒரு ஊரில் வாங்கிய லாட்டரி எண்ணுக்கு, வேறு ஊரில் சென்று பரிசை கேட்டு வாங்க முடியாது. அந்த ஊருக்கு மட்டுமே அது பொருந்தும்.
 தமிழகத்தைப் பொருத்தவரையில், சென்னை சைதாப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு லாட்டரி கும்பல் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
 ஒவ்வொரு பகுதிக்கும் விற்பனை பிரதிநிதி, விற்பனை முகமை, விற்பனை தலைமை என்ற படிநிலைகள் உண்டு. ஏற்கெனவே, பிற சட்டவிரோதச் செயல்களை தொடர்ந்தவர்களும், அரசியல் பின்புலம் கொண்டவர்களும் ஒவ்வொரு பகுதியின் அங்கீகாரம் பெற்ற விற்பனை முகவர்களாக இருப்பர். குறிப்பாக, தமிழகத்தில் வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர் போன்ற வடக்கு மாவட்டங்களில் பெரும்பான்மை ஊர்களை இந்த கும்பல் ஆக்கிரமித்துள்ளது.
 தமிழகத்தில் 3 நம்பர் லாட்டரி ஏகபோகத் தொழிலாக மாறியுள்ள நிலையில், விழுப்புரத்தில் நகைத் தொழிலாளி 3 நம்பர் லாட்டரி மோகத்துக்கு அடிமையாகி, கடன் சுமை தாளாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். அதுபோன்று பலரும் 3 நம்பர் லாட்டரியால் பாதிக்கப்பட்டு, உயிரை மாய்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
 இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தமிழகம் முழுவதும் லாட்டரி விற்பனையாளர்கள் மீது கைது நடவடிக்கை தீவிரம் பெற்றுள்ளது. எனினும், தொடர் கண்காணிப்பு, சட்ட நடவடிக்கைகள் மூலம் இந்த வகை லாட்டரி விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 -கி.சுரேஷ்குமார்

ADVERTISEMENT
ADVERTISEMENT