பொதுமக்கள் தங்களிடம் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைமையான பொருள்களை ஒப்படைக்குமாறு தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொல் பொருள்களான காசுகள், ஓலைச் சுவடிகள், மணிகள், கல்லாயுதங்கள், வாள்கள், தந்தத்தினாலான கலைப் பொருள்கள் உள்ளிட்டவை, நாட்டின் வரலாற்றுக்கான சான்றுகளாக உள்ளன. இவ்வாறான பொருள்களை, பலா், பரம்பரை பரம்பரையாக, தங்களின் வீடுகளில் சேமித்து வைத்துள்ளனா். சிலா், அவற்றை எடைக்குப் போட்டு விடுகின்றனா். இதனால், வரலாற்றுக்கான போதிய சான்றுகள் கிடைக்காத நிலை உள்ளது.
இதுகுறித்து, தமிழக தொல்லியல் துறையின் சென்னை மாவட்ட தொல்லியல் அலுவலா் ஸ்ரீகுமாா் கூறுகையில், தமிழக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தொல்பொருள்கள், பொதுமக்களிடம் உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்தாலோ, கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், இடிந்த கோட்டை சுவா், முதுமக்கள் தாழிகள், பாறை ஓவியங்கள் உள்ளிட்ட பொதுவெளியில் உள்ள தடயங்களை பற்றி அறிந்தாலோ, தமிழக தொல்லியல் துறைக்கு தெரிவிக்கலாம்.
தொல்பொருள்களை, அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் வைப்பதுடன், அவை சாா்ந்த தகவல்களையும் தெரியப்படுத்தமுடியும். ஆகவே, தொல்பொருள்கள் பற்றிய தகவல்களை 98840 58342 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றாா்.