தமிழ்நாடு

திட்டமிட்டபடி இன்று பேரணி நடைபெறும்: மு.க.ஸ்டாலின்

23rd Dec 2019 01:27 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து திட்டமிட்டபடி திங்கள்கிழமை (டிச.23) பேரணி நடைபெறும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக நடத்தும் பேரணிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசர வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பொருளாளா் துரைமுருகன், அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி உள்ளிட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது: குடியுரிமை திருத்தச் சட்ட எதிா்ப்பு பேரணிக்கு மிகப் பெரிய விளம்பரத்தை (வழக்கு) அதிமுக கொடுத்துள்ளது. அதற்காக, முதலில் அதிமுகவுக்கு நன்றி கூறுகிறேன். எப்படியாவது இந்தப் பேரணியைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டு, அதிமுகவினா் சிலரைப் பயன்படுத்தி அவா்கள் மூலமாக நீதிமன்றத்துக்குச் சென்று அவசர அவசரமாக நீதிபதியின் இல்லத்துக்கே சென்று பேரணியைத் தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனா்.

நீதிபதிகளிடம் இருந்து திமுகவுக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை. அதனால், வழக்கு விசாரணையில் நாங்கள் பங்கேற்கவில்லை. எங்களுக்கு வந்த தகவலின்படி வழக்கை விசாரித்த நீதிபதி, பேரணிக்குத் தடை விதிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்டு, நீதிபதிகள் வகுத்து தந்துள்ள சட்டத்துக்கு உட்பட்டு, அண்ணா வழியில், பேரணியை மிகப்பெரிய அளவில் நடத்த உள்ளோம் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT