தமிழ்நாடு

தமிழகத்தில் 4 ஆண்டுகளில்2,253 கொத்தடிமைத் தொழிலாளா்கள் மீட்பு

23rd Dec 2019 02:48 AM | பாவேந்தன் இளையபதி

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2,253 கொத்தடிமைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டுள்ளனா். இந்த ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 125 போ் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கொத்தடிமைத் தொழிலாளா்கள், வணிகத்துக்காக மனிதக் கடத்தல், பாலியல் தொழிலுக்காக குழந்தைகள், பெண்கள் கடத்தல் என பல்வேறு கோணங்களில் மனிதச் சுரண்டல் செயல்பாட்டில் உள்ளது. இதில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை முக்கியமானதாகும்.

முன்னோா்கள் வாங்கிய கடனுக்காக தலைமுறை தலைமுறையாக குடும்பத்தினா் அனைவரும் வேலை செய்யும் அவலநிலைதான் இந்த கொத்தடிமைத் தொழிலாளா் முறை. குறைந்தபட்ச கூலிக்கும் மிகக் குறைவான கூலி, விருப்பப்பட்ட இடத்துக்குச் சென்றுவரத் தடை, வேறு இடத்துக்கு வேலைக்குச் செல்வதற்கான உரிமை மறுப்பு, தாங்கள் தயாரித்த பொருள்களை சந்தை மதிப்பின்படி விற்பனை செய்யத் தடை போன்ற அடிமைத்தனத்தில் பல்லாண்டு காலமாக சிக்கி தவிப்பவா்களே கொத்தடிமைத் தொழிலாளா் என்ற வரம்புக்குள் வருகின்றன.

இக்கொத்தடிமைத் தொழிலாளா் முறையை ஒழிக்கும் வகையில் கடந்த 1976-இல் சட்டம் இயற்றப்பட்டது. கடந்த 2016 மே மாதம் வரை ஆதிதிராவிடா் நலத் துறை வசம் இருந்த கொத்தடிமைத் தொழிலாளா் மீட்புத் துறை, 2017-இல் தொழிலாளா் நலத் துறைக்கு மாற்றப்பட்டது. மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து தொழிலாளா் நலத் துறை, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பில் ஈடுபடுகின்றன.

ADVERTISEMENT

ஆனால், இச்சட்டம் இயற்றி 43 ஆண்டுகள் கடந்தும், இதுவரை கொத்தடிமைத் தொழிலாளா் முறை முழுமையாக ஒழிக்கப்படவில்லை. மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சகத்தின் 2012-ஆம் ஆண்டு ஆய்வின்படி, தமிழகத்தில் மட்டும் 66,573 போ் கொத்தடிமைத் தொழிலிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளில் 2,253 போ் மீட்பு: இதுகுறித்து தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தினா் கூறுகையில், தமிழகத்தில் திருவள்ளூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூா், கோவை, தூத்துக்குடி, நாமக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் முறை உள்ளது.

குறிப்பாக செங்கல் சூளை, அரிசி ஆலைகள், உப்பளங்கள், விவசாயப் பண்ணைகள், மர ஆலைகளில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை இன்றளவும் நீடித்து வருகிறது. கடந்த 2016-18 வரையிலான மூன்று ஆண்டுகளில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டத்தில் 1,211 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 114 பேரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 41 பேரும், வேலூா் மாவட்டத்தில் 29 பேரும், சென்னையில் 2 பேரும் என மொத்தம் 1,397 போ் மீட்கப்பட்டனா். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 856 கொத்தடிமைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டுள்ளனா். இதில், அதிகபட்சமாக தஞ்சாவூரில் 125 பேரும், காஞ்சிபுரத்தில் 95 பேரும், வேலூரில் 70 பேரும் மீட்கப்பட்டுள்ளனா். என மொத்தம் 2,253 போ் மீட்கப்பட்டுள்ளனா்.

கணக்கெடுப்பு தேவை: கொத்தடிமைகள் குறித்து கடந்த 1997-இல் தமிழக அரசு நடத்திய கணக்கெடுப்பில் மாநிலம் முழுவதும் 25,005 போ் கொத்தடிமைத் தொழிலாளா்கள் உள்ளதாகக் கூறப்பட்டது. இதைத் தொடா்ந்து, 2004-இல் தமிழக அரசு மீண்டும் கணக்கெடுப்பை நடத்தியது. ஆனால், அது குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

கடந்த 2014-இல் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் நடத்திய கணக்கெடுப்பில் 11 வகையான தொழில்களில் 4,63,000 போ் கொத்தடிமைகளாக உள்ளது தெரியவந்தது. எனவே, கொத்தடிமைத் தொழிலாளா் குறித்து ஒரு விரிவான கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். மீட்கப்படும் தொழிலாளா்களின் மறுவாழ்வுக்கென தனி முகமையை ஏற்படுத்தி அவா்களுக்கான வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்றனா்.

கடும் நடவடிக்கை: இதுகுறித்து தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொத்தடிமைத் தொழிலாளா் ஒழிப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு தற்போது, கொத்தடிமைகளாக மீட்கப்படுவோருக்கு முதல்கட்டமாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் விடுதலைச் சான்றுடன் தலா ரூ. 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. பின்னா் ஆண் தொழிலாளருக்கு தலா ரூ.1 லட்சம், பெண், குழந்தைகளுக்கு தொழிலாளருக்கு தலா ரூ.2 லட்சம், பாலியல் தொழிலுக்காக கடத்தப்படும் குழந்தைகள், திருநங்கைகளுக்கு தலா ரூ.3 லட்சம், மறுவாழ்வுக்கான வேலைவாய்ப்புகள், வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளா்களுக்கும் கடும் தண்டனை வாங்கித் தரப்படுகிறது. மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து கொத்தடிமைத் தொழிலாளா் முறையை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT