தமிழ்நாடு

மேற்கு வங்க வன்முறை களத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக கால்பந்து அணி

16th Dec 2019 10:57 AM | ஆ.நங்கையார் மணி

ADVERTISEMENT

 

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான கால்பந்து போட்டிகள் திரிபுரா மாநிலத்தில் நடைபெற இருந்தன.

இதற்கான 18 பேர் கொண்ட தமிழக அணி திண்டுக்கல்லில் தேர்வு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அணி மேலாளர் ராஜ்மோகன் பயிற்றுநர் பாண்டி ஆகியோர் தலைமையில் அணியில் இடம்பெற்றிருந்த 18 மாணவர்கள் என 20 பேர் கொண்ட தமிழக அணி கடந்த பத்தாம் தேதி இரவு பாண்டியன் விரைவு ரயில் மூலம் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

அசாம் மாநிலம் குவாஹாட்டி வரை சென்ற தமிழக அணியினர், அங்கு நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு இடையே மேற்கொண்டு பயணத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 2 நாள்களாக குவாஹட்டி ரயில் நிலையத்தில் தவித்த தமிழக அணியினர், மீண்டும் தமிழகம் திரும்புவதற்காக ரயிலில் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், பலத்த போராடங்கள் காரணமாக அந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனை அடுத்து, பெங்களூரு செல்லும் ரயிலில் புறப்பட்டுள்ளனர். அந்த ரயில் கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்தபோது, வன்முறை போராட்டங்கள் காரணமாக சிலிகுரி அடுத்துள்ள நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் அந்த ரயில் நிலையத்திலேயே தமிழக அணியினர் சிக்கி கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக கல்வித்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தபோதிலும், இதுவரை தமிழக அணியினரை மீட்பதற்கான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது. இதனால், மாணவர்களின் பெற்றோர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மாணவர்களின் பெற்றோர்கள், கொல்கத்தாவிலிருந்து சுமார் 300 கி.மீட்டர் தொலைவிலுள்ள  ரயில் நிலையத்தில் தமிழக அணியினர் தவித்து வருகின்றனர். ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், எந்த நேரத்திலும் கலவரம் ஏற்படுவதற்கான சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.

அதனால், தமிழக அணியினரை பாதுகாப்பாக மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது அணியினர் தவித்து வரும் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்திலிருந்து 11 கி.மீட்டர் தொலைவில் சிலிகுரி விமான நிலையம் உள்ளதாக கூறுகின்றனர். 

எனவே, மாணவர்களையும் அணி நிர்வாகிகளையும் பாதுகாப்பாக விமான நிலையத்திற்கு அழைத்து வந்து, அங்கிருந்து தமிழகத்திற்கு அழைத்து வர அரசு துரிதமாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT