சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தில்லியில் போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து சென்னையில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.
முகமது சதக் கல்லூரி, சென்னை ஐஐடி, லயோலா கல்லூரி, புதுக் கல்லூரி மாணவர்கள், அவரவர் கல்லூரி வாயில்களில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில், ஏராளமான மாணவர்கள், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் தாக்கியதைக் கண்டித்து கோஷம் எழுப்பியபடி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்க்கிறோம் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்னையில் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.