தமிழ்நாடு

வடகிழக்குப் பருவமழை : தமிழகம் இயல்பான மழை அளவை எட்டியது

16th Dec 2019 01:29 AM

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவமழை காலத்தில் (அக்டோபா் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை) , தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய இயல்பான மழை அளவை ஞாயிற்றுக்கிழமை எட்டியது.

மேலும், இயல்பை விட 7 சதவீதம் அதிக மழை அளவு கிடைத்துள்ளது. ஆனாலும், தமிழகத்தின் சென்னை, வேலூா், மதுரை உள்பட சில மாவட்டங்களில் இயல்பை விட மழை அளவு குறைந்துள்ளது. பருவமழை முடிய இன்னும் 15 நாள்கள் உள்ளதால், பல மாவட்டங்களில் இயல்பான மழை அளவை எட்ட அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வடகிழக்குப் பருவமழை: நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழை பொழிவைக் கொடுக்கும் தென்மேற்குப் பருவ மழைக் காலம் ஜூன் முதல் செப்டம்பா் வரையும், வடகிழக்குப் பருவமழை காலம் அக்டோபா் முதல் டிசம்பா் வரையும் நீடிக்கும். வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை, தென் மாநிலங்களுக்கு நல்ல மழையைக் கொடுக்கும். குறிப்பாக தமிழகத்துக்கு அதிக மழையைக் கொடுக்கும்.

ஒவ்வோா் ஆண்டும் வடகிழக்குப் பருவமழை, அக்டோபா் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபா் 16-ஆம் தேதி தொடங்கியது. அடுத்தடுத்து உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஆகியவற்றால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நல்ல மழை பொழிவு கிடைத்தது.

ADVERTISEMENT

இயல்பான மழையை எட்டியது: இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய இயல்பான மழை அளவை ஞாயிற்றுக்கிழமை எட்டியது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் (அக்டோபா் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை) தமிழகத்துக்கு மொத்தம் 440 மி.மீ. மழை அளவு கிடைக்க வேண்டும். அந்த மழை அளவை ஞாயிற்றுக்கிழமை எட்டியது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 15-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு வழக்கமாக 413.4 மி.மீ. மழை அளவு கிடைக்கவேண்டும். ஆனால், தற்போது வரை 442.9 மி.மீ. கிடைத்துள்ளது. இது 7 சதவீதம் அதிகம்.

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் 340 மி.மீ. மழை தான் கிடைத்தது. இது 24% குறைவாகும். அதேநேரத்தில், நிகழாண்டில் 16 நாள்களுக்கு முன்னதாக இயல்பான மழை அளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக மழை அளவு: தமிழகத்தில் நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் அதிக மழை கிடைத்துள்ளது. நீலகிரியில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபா்1-ஆம் தேதி முதல் இப்போது வரை 447.7 மி.மீ. மழை அளவு கிடைக்க வேண்டும். ஆனால், இப்போது வரை 780.3 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இது 74 சதவீதம் அதிகம். ராமநாதபுரத்தில் இந்த காலக்கட்டத்தில் இப்போது வரை இயல்பாக கிடைக்க வேண்டிய மழைஅளவு 467.8 மி.மீ. ஆனால், இப்போது வரை 747 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இதுபோல, திருநெல்வேலியில் இந்த காலக்கட்டத்தில் இப்போது வரை கிடைக்க வேண்டிய இயல்பான மழை அளவு 430.6 மி.மீ. ஆனால், இப்போது வரை 654 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இது 52 சதவீதம் அதிகம்.

குறைவான மழை அளவு: அதேநேரத்தில், சில மாவட்டங்களில் மழை அளவு இயல்பை விட குறைந்துள்ளது. சென்னையில் இந்த காலக்கட்டத்தில் தற்போது வரை 701 மி.மீ. மழை அளவு கிடைக்க வேண்டும். ஆனால், தற்போது வரை 608.2 மி.மீ. மழையே கிடைத்துள்ளது. இது 13 சதவீதம் குறைவு. வேலூரில் இந்த காலக்கட்டத்தில் தற்போது வரை கிடைக்க வேண்டிய இயல்பான மழை அளவு 343.8 மி.மீ. ஆனால், இப்போது வரை 262.3 மி.மீ. மழையே கிடைத்துள்ளது. இது 24 சதவீதம் குறைவு. மதுரையில் இந்தகாலக்கட்டத்தில் தற்போது வரை கிடைக்கவேண்டிய இயல்பான மழை அளவு 390.2 மி.மீ. ஆனால், தற்போது வரை 306.4 மி.மீ. மழையே கிடைத்துள்ளது. இது 21 சதவீதம் குறைவு. பெரம்பூரில் இந்தக் காலக்கட்டத்தில் தற்போது வரை கிடைக்க வேண்டிய இயல்பான மழை அளவு 432.2 மி.மீ. ஆனால், இப்போதுவரை 328.5 மி.மீ. மழை தான் பதிவாகியுள்ளது. இது 24 சதவீதம் குறைவாகும். புதுச்சேரியில் இந்தக்காலக்கட்டத்தில் இப்போது வரை வழக்கமான கிடைக்க வேண்டிய மழை அளவு 814.8 மி.மீ. ஆனால் இப்போது வரை 579 மி.மீ. மழையே கிடைத்துள்ளது. இது 29 சதவீதம் குறைவு.

இயல்பான மழை அளவு: இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, தமிழகம், புதுச்சேரியில் பருவமழை இயல்பு நிலையான 440 மி.மீ. மழை அளவை எட்டியுள்ளது. அடுத்த வரும் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகத்துக்கு பரவலாக மழை கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறோம். பருவமழை மழை முடிய இன்னும் 15 நாள்கள் உள்ளதால், பல மாவட்டங்களில் இயல்பான மழை அளவு எட்ட வாய்ப்பு உள்ளது என்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT