தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தில் தொடங்கியது யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம்

16th Dec 2019 03:15 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தமிழக கோயில்கள், திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளரும், ஆணையருமான க.பணீந்திர ரெட்டி, கோயில் யானைகளுக்குப் பழம், கரும்பு, கருப்பட்டி உள்ளிட்ட உணவுப் பொருள்களைக் கொடுத்து முகாமைத் தொடக்கிவைத்தார்.
 பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 48 நாள்களுக்கு நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை, வனத் துறை, கால்நடை பராமரிப்புத் துறையினர் செய்து வருகின்றனர். முகாமில் யானைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி பசுந்தீவனங்கள், பழங்கள், அஷ்டசூரணம், பயோபூஸ்ட் உள்ளிட்ட 13 வகை உணவுகள் வழங்கப்படுகின்றன.
 காலை, மாலை இருவேளையும் யானைகளுக்கு நடைப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. யானைகளுக்கு நீர்த் தெளிப்பான்கள் மூலம் குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
 காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை அனுமதி: கோயில் யானைகளை உள்ளூர்வாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் இலவசமாகப் பார்வையிட தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணியில் இருந்து மாலை 4 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 48 நாள்களுக்குப் புத்துணர்வு பெற உள்ள யானைகள்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள், பாஷ்யக்கார சுவாமி கோயில் யானை கோதை, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் படைவீடு யோகராமசந்திர சுவாமி கோயில் யானை லட்சுமி, மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயில் யானை அபயாம்பிகை, கும்பகோணம் வேங்கடாசலபதி சுவாமி, ஒப்பிலியப்பன் கோயில்களின் யானை பூமா, திருக்கடவூர் அமிர்தகடேஸ்வர சுவாமி கோயில் யானை அபிராமி, தஞ்சாவூர் திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோயில் யானை தர்மாம்பாள், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானை செங்கமலம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் யானை ஆண்டாள், மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயில் யானை லட்சுமி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் யானை அகிலா, கோவை, பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயில் யானை கல்யாணி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் யானை பார்வதி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் யானை கஸ்தூரி, அழகர்கோயில், கள்ளழகர் கோயில் யானை சுந்தரவல்லி தாயார், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் யானை ராமலட்சுமி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமாலா (எ) ஜெயமால்யதா, காளையார்கோயில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் யானை சொர்ணவல்லி (எ) காந்தி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் யானை கோமதி, திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில் யானை காந்திமதி, ஆழ்வார்திருநகரி ஆதிநாத ஆழ்வார் கோயில் யானை ஆதிநாயகி, திருக்கோளூர் வைத்தியமாநிதிப் பெருமாள் கோயில் யானை குமுதவல்லி, இரட்டைத் திருப்பதி அரவிந்தலோசனார் கோயில் யானை லட்சுமி, திருக்குறுங்குடி நம்பிராயர் கோயில் யானை சுந்தரவல்லி, திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் யானை குறுங்குடி வள்ளி, புதுச்சேரி, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் தேவஸ்தான யானை பிரக்ருதி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி ஆகிய 28 யானைகள் சிறப்பு முகாமில் பங்கேற்றுள்ளன.
 இதில், புதுச்சேரியைச் சேர்ந்த பிரக்ருதி, லட்சுமி ஆகிய யானைகள் மட்டும் இன்னும் ஓரிரு நாள்களில் முகாமுக்கு வந்தடையும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அதிக வயது: முகாமில் பங்கேற்ற யானைகளில் அதிக வயதுடையது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் யானை கஸ்தூரி (59). இது நீண்ட தும்பிக்கை கொண்டதும் ஆகும். வயது குறைந்த யானை இரட்டைத் திருப்பதி அரவிந்தலோசனார் கோயில் யானை லட்சுமி (19) ஆகும்.
 27 வகை உணவுகள்: முகாமில் யானைகளுக்கு கூந்தல்பனை, தென்னை மட்டை, புல் (கோ1, கோ2, கோ3), கரும்புச் சோகை, சாறுள்ள கரும்பு, பலா இலை, சோளத்தட்டு, ரீட்ஸ், ஆத்தி, ஆல், அரசு, மூங்கில், கீரை வகைகள் போன்றவை வழங்கப்படும். தானிய வகையில் அரிசி, பச்சைப் பயறு, கொள்ளு, உப்பு, மஞ்சள், ஆயுர்வேத மருந்துகளில் அஷ்டசூரணம், சியாவன்பிராஷ், பயோ பூஸ்ட் மாத்திரை, புரோட்டின் சப்ளிமென்ட், மல்டி வைட்டமின் மாத்திரைகள், மினரல் மிக்ஸர் ஆகியவையும், சிறப்பு உணவு வகைகளில் பேரீச்சை, அவல், கேரட், பீட்ரூட் போன்றவை வழங்கப்படுகின்றன.
 இதுமட்டுமல்லாமல், கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் குறிப்பிட்ட சில யானைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்தாக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் ஆகியவை வழங்கப்படும்.
 முகாம் குறித்து வனத் துறையினர் கூறியதாவது: முகாமில் டின்ஷீட், சோலார், தொங்கு கம்பி, சீரியல் பல்புகள், வெளிச்சம் எதிரொலிக்கும் பட்டைகள் உள்ளிட்ட 6 வகையிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4 ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 3 வனத் துறை பணியாளர்கள், 70 தற்காலிக கூலியாள்கள் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
 இரவு நேரத்தில் வனத்தில் இருந்து வெளிவரும் யானைகளை விரட்ட பட்டாசுகள் பயன்படுத்தப்பட உள்ளன. 4 குழுக்களாக வனத் துறையினர் பிரிந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 நெல்லிமலை, கண்டியூர், தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகள் வழியாக வரும் யானைகள் விவசாய நிலங்களுக்கு உள்ளேயும், குடியிருப்பு பகுதிகளிலும் நுழையாமல் இருக்க வனத் துறையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்ற உள்ளதாக தெரிவித்தனர்.
 பாகன்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு: காரமடை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் யானை பாகன்களுக்கு சிகிச்சை அளிக்க 48 நாள்களுக்கு மருத்துவர் சுதாகர் தலைமையில் 4 மருத்துவர்கள், 2 செவிலியர் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் முகாம் வளாகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
 24 மணி நேரப் பணியில் கால்நடை மருத்துவக் குழு: கால்நடை மண்டல இணை இயக்குநர் ஆர்.பெருமாள்சாமி தலைமையில் மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவர் ராஜாங்கம் மேற்பார்வையில் 24 மணி நேரம் சுழற்சி முறையில் ஒரு கால்நடை மருத்துவர், 2 உதவி மருத்துவர்கள், 2 ஆய்வாளர்கள், 2 பராமரிப்பு உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள்.
 காட்டு யானைகளை நினைத்து பாகன்கள் அச்சம்: முகாம் பகுதியைச் சுற்றிலும் காட்டு யானைகள் வராமல் இருக்க தகர ஷீட்டுகள், மின் விளக்குகள் போடப்பட்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டு முகாம் திடீரென தொடங்கப்பட்டதால் பல்வேறு பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன. ஒருசில பாகன்களுக்குப் போதுமான பாதுகாப்பான முறையில் அறைகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளன. முகாமை ஒட்டியுள்ள நெல்லிமலை அடிவாரத்தில் செடி, கொடிகள் அகற்றப்படாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் காட்டு யானைகள் வருவது தெரியாது என்பதால் பாகன்கள் அச்சத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT