தமிழ்நாடு

மாயனூர் வருகிறது மகாநதி!

16th Dec 2019 02:00 AM

ADVERTISEMENT

"மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு-பாலாறு-காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தென் மாநிலங்களுக்கு பயனளிப்பதாக அமையும்."

திருச்சி: மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு -பாலாறு - காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தில் காவிரி நதியை கல்லணையில் இணைப்பதற்கு பதிலாக கரூர் மாவட்டம், கட்டளைமேட்டு வாய்க்காலில் மாயனூர் பகுதியில் இணைக்கும் வகையில் விரிவான திட்ட வரைவுக்கு தேசிய நீர் மேம்பாட்டு முகமை ஆயத்தமாகியுள்ளது.
நீர் மிகை மாநிலங்களில் இருந்து நீர் பற்றாக்குறை பகுதிகளுக்கு தண்ணீரை எடுத்துச் செல்லும் நோக்கில், கடந்த 1980-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அப்போதைய நீர்ப்பாசன அமைச்சகத்தின் மூலம் தேசிய கண்ணோட்டத் திட்டம் தயாரிக்கப்பட்டது.
இத் திட்டத்தின்கீழ் தேசிய நீர் மேம்பாடு முகமையானது சாத்தியக்கூறு அறிக்கைகள் தயாரிப்பதற்காக 30 நதிகளை இணைப்பது என கண்டறிந்துள்ளது. இதில் 16 தீபகற்ப நதிகளும், இமயமலைப் பகுதிகளில் இருந்து வரும் 14 நதிகளும் இடம்பெற்றுள்ளன.
இதன்படி, மகாநதி- கோதாவரி- கிருஷ்ணா-பெண்ணாறு- பாலாறு- காவிரி- வைகை- குண்டாறு நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தென் மாநிலங்களுக்கு பயனளிப்பதாக அமையும். இத்திட்டத்தின் தாய் நதி இணைப்பாக மகாநதி- கோதாவரி உள்ளது.
தேசிய நீர் மேம்பாடு முகமையின் பல்வேறு கூட்டங்களின்போது மகாநதி- கோதாவரி- கிருஷ்ணா-பெண்ணாறு- பாலாறு- காவிரி- வைகை - குண்டாறு நதிகள் இணைப்பைச் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நதிகள் இடையேயான இணைப்புத் திட்டத்தின் கீழ், மகாநதி - கோதாவரி இணைப்புத் திட்டம் ஒரு முன்னுரிமை இணைப்பாக செயல்படுத்தப்படவுள்ளது. மகாநதியிலிருந்து, கோதாவரி வரையிலும், கோதாவரியிலிருந்து கிருஷ்ணா நதி வரையிலும், கிருஷ்ணா நதியிலிருந்து பெண்ணாறு வரையிலும் இணைக்கப்பட வேண்டும். பின்னர், ஆந்திர, தமிழக நதிகளை இணைக்கும் வகையில் திட்டப் பணிகளைப் பிரித்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முக்கியப்பகுதியாக பெண்ணாறு, பாலாறு, காவிரி இணைப்புக்கு 529.90 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டப்பட வேண்டும். இந்தக் கால்வாயானது கல்லணை வரை வருகிறது. இதற்கு மாறாக, கட்டளை மேட்டு வாய்க்காலில் மாயனூரில் இணைக்க தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இக் கால்வாயானது ஆந்திர மாநிலத்தில் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களையும், தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர் மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இத் திட்டமானது முழுமையாக செயல்படுத்தப்பட்டால் ஒடிஸா, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வறட்சியான பகுதிகளுக்கு உபரி நீரை புதிய கால்வாய் வழியாக திருப்ப முடியும். இதன் மூலம், 7 மாநிலங்களில் பல லட்சக்கணக்கில் பாசனப் பரப்பு அதிகரிக்கும். உணவு உற்பத்தியும் அதிகரிக்கும். வறட்சிப் பகுதிகளில் மக்களின் குடிநீர்த் தேவையும் பூர்த்தியாகும்.
2003-04-ஆம் ஆண்டில் இத் திட்டத்துக்கு ரூ.6,769 கோடியாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இப்போது, இருமடங்கு கூடுதலாக உயர்ந்திருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய நீர் மேம்பாட்டு முகமையானது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதே தமிழக விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

பணிகளை விரைவுபடுத்த வேண்டும்

கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இப்போது, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் தேசிய நீர் மேம்பாட்டு முகமை மேற்கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். ஏற்கெனவே ஆய்வு செய்து திட்ட மதிப்பீடும் கணக்கிடப்பட்டு 2003-04 ஆம் ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டியது. எனவே, மத்திய அரசானது இத் திட்டத்துக்கான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். தலைப்பு பகுதியான மகாநதி-கோதாவரி இணைப்புக்கான நிதியை ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்தினாலே, அடுத்தடுத்த கட்ட பணிகளை அந்தந்த மாநில அரசுகளின் துணையுடன் மத்திய அரசு நிதியையும் சேர்த்து திட்டத்தை முழுமையாக முடித்துவிடலாம். எனவே, மத்திய அரசு இத் திட்டத்துக்கான நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும்.
பி. அய்யாக்கண்ணு,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர்

ADVERTISEMENT

காவிரி-தெற்கு வெள்ளாறு இணைப்புக்கு ரூ.7,677 கோடி!

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் தொடர்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரப் பிரிவு (திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்டம்) அலுவலகத்தில் தகவல் கோரப்பட்டது. இதற்கு அளிக்கப்பட்ட பதிலில், கால்வாய் இணைப்பு திட்டமானது தேசியத் திட்டம் என்பதால் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சேர்த்திருப்பதாகக் கூறியுள்ளனர். இதுமட்டுமல்லாது, காவிரி-தெற்கு வெள்ளாறு இணைப்பு கால்வாய் திட்டத்துக்காக மட்டும் ரூ.7,677 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
புலியூர் அ.நாகராஜன்,
தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி தலைவர்

8 நதிகள் இணைப்பு சாத்தியமே!

தெலங்கானா மாநிலத்தில் கோதாவரி-காளேஸ்வரம் நீரேற்றுத் திட்டத்தை 2 ஆண்டுகளில் சாத்தியமாக்கி வெற்றி பெற்றுள்ளனர். நதிகளே இல்லாத பகுதியில் குழாய்கள், சுரங்கம், அணைக்கட்டு, செயற்கை நீர்நிலைகள் ஆகியவற்றை உருவாக்கி 350 கி.மீ. தொலைவுக்கு தண்ணீரை கொண்டு சென்று திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இதேபோல, மகாநதி-கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தையும் செயல்படுத்தலாம். ஏனெனில், திட்டத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் பாதையில் 8 நதிகள் ஓடுகின்றன.
த. குருசாமி,
தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் மாநிலத் தலைவர்.

-ஆர். முருகன்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT