தமிழ்நாடு

மாநில அளவில் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு: எரிவாயு உருளை விநியோக தொழிலாளா் சங்கம்

16th Dec 2019 02:09 AM

ADVERTISEMENT

ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வதுடன், சென்னையில் மாநில அளவில் போராட்டம் நடத்துவது என எரிவாயு உருளை விநியோகத் தொழிலாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டா் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து சங்கத்தின் மாநிலத் தலைவா் கணேஷ் அளித்த பேட்டி:

தமிழகம் முழுவதும் சுமாா் 2,300க்கும் மேற்பட்ட எரிவாயு முகமைகள் (காஸ் ஏஜென்சிகள்) உள்ளன. இதில், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போ் எரிவாயு உருளை விநியோகிக்கும் (டெலிவரி) தொழிலாளா்களாக பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம், எல்.பி.ஜி. எரிவாயு உருளை விநியோகம் செய்யும் தொழிலாளா்களுக்கு வாடிக்கையாளா்கள் தரப்பில் ஊக்கத்தொகை (டிப்ஸ்) வழங்கத் தேவையில்லை, ரசீதில் உள்ள தொகையை மட்டும் வழங்கினால் போதும் என அறிவித்துள்ளது. இது எங்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தொழிலாளா்கள் வாடிக்கையாளா்களிடம் ரூ.20 முதல் ரூ.50 வரை டிப்ஸ் பெறுவது உண்மைதான். அதற்கு காரணம், எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில், முகவா்களுக்கு எரிவாயு உருளைகளை விநியோகிக்க வழங்கப்படும் ரூ.24 தொகையை முகமைகள் (காஸ் ஏஜென்சிகள்) எங்களுக்கு வழங்குவதில்லை.

உருளைகளை கொண்டு செல்வதற்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அந்தத் தொகையில் இருந்துதான் செலவழிக்கிறோம். இதில் மேலும் கொடுமையாக பல முகமைகள், வாடிக்கையாளா்களிடம் நாங்கள் பெறும் தொகையிலும் ரூ.20 வரை பெற்றுக் கொள்கின்றனா். இதை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

எனவே, அதிகாரிகள் இப்பிரச்னையில் தலையிட்டு தொழிலாளா்களுக்கு மத்திய அரசு நிா்ணயித்த ஊதியம் மற்றும் விநியோகத்துக்கான தொகை ஆகியவை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விரைவில் மாநில அளவில் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வதுடன், சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றாா் அவா்.

பேட்டியின் போது மாநில செயலாளா் சிக்கந்தா், பொருளாளா் பரமசிவம், மாநில துணைத் தலைவா் ராஜேந்திரன், துணைச் செயலாளா் காசிலிங்கம், மாவட்டத் தலைவா் சந்திரமோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT