தமிழ்நாடு

புதிய சிந்தனைகள் உருவாக புத்தக வாசிப்பு அவசியம்: த.ஸ்டாலின் குணசேகரன்

16th Dec 2019 03:21 AM

ADVERTISEMENT

ஆங்கில மொழியோ, தமிழ் மொழியோ, வரலாறு தெரியாமல் குழந்தைகள் இனி வளரக் கூடாது; புதிய சிந்தனைகள், புதிய தமிழகம் உருவாக புத்தக வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்றார் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின்குணசேகரன்.
 நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலக வாசகர் வட்டம் மற்றும் நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை சார்பில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்ல நூலகத்தில், மகாகவி பாரதியார் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
 இந்த விழாவில், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின்குணசேகரன் பேசியது:
 ஆசிரியர்களானாலும், பெற்றோர்களானாலும் சரி குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களுடன், நல்ல சிந்தனைகளை வளர்க்கும் வகையிலான புத்தகங்களை படிக்க வைக்க வேண்டும். ஆசிரியர்கள் பாடப் புத்தகம் அல்லாமல் கருத்து வாய்ந்த புத்தகங்களை படிக்கச் செய்யும்போதுதான் மாணவர்கள் மனதில் பதிந்து, மிகப்பெரிய சொற்பொழிவாளர்களாக, கருத்தாளர்களாக வருவதற்கு வாய்ப்புள்ளது.
 பாரதியார் மீது நாமக்கல் கவிஞருக்கு மிகுந்த அன்பு உண்டு. கவிஞர் ராமலிங்கம் பிள்ளையை தேசிய கவிஞர், மகா கவிஞர் என நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அவர் சிறந்த ஓவியர் என்பதை, காரைக்குடியில் உள்ள பெரிய அரண்மனைகளில் இருக்கும் ஓவியங்கள் சொல்லும். அந்த வகையில், ஒரு சமயம் காரைக்குடியில் ஓவியம் தீட்டிக் கொண்டிருந்த கவிஞருக்கு, அருகில் உள்ள கிராமத்துக்கு வந்த பாரதியை காணும் வாய்ப்பு கிட்டியது. அப்போது, தனக்காக ஒரு பாடல் பாடுமாறு கவிஞர் கேட்டுள்ளார்.
 ஆனால், பாரதி மறுத்துவிட்டார். இரவில் கவிஞர் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரைத் தட்டியெழுப்பி கவிதை பாடியவர் பாரதி. அந்த நாள் கனவா அல்லது நினைவா என கவிஞரை ஒவ்வொரு நாளும் எண்ணிப் பார்க்க வைத்தது.
 பாரதியார் எழுதி வைத்துக் கொண்டு கவிதை பாடுபவர் அல்ல, தேச பக்திப் பாடல்களை மேடைகளில் இருந்தபடியே உடனுக்குடன் பாடுவார். அதன்பின்னரே எழுதி வைத்துக் கொள்வார்.
 வருங்காலத் தலைமுறைகள் அவரது வரலாற்றினைப் படிக்க வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதனை ஊக்குவிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின் குணசேகரன்.
 இவ் விழாவில், மாவட்ட நூலக அலுவலர் கோ.ரவி, கம்பன் கழகத் தலைவர் வ.சத்தியமூர்த்தி, தமிழ்ச் சங்கத் தலைவர் ஆர். குழந்தைவேல், நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவைத் தலைவர் டி.எம்.மோகன், பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார், கவிஞர் சிந்தனைப் பேரவை நிர்வாகிகள் கோபாலநாராயணமூர்த்தி, யுவராஜ், திருக்குறள் ராஜா, நூலக அலுவலர் ப.செல்வம் மற்றும் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT