கேரள மாநிலம், அச்சன்கோவில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் அடங்கிய திருஆபரண பெட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை தென்காசிக்கு கொண்டுவரப்பட்டது. திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று அதை தரிசனம் செய்தனா்.
ஐயப்பனின் படைவீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல மகோற்சவ விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவையொட்டி, ஐயப்பனுக்கு தங்கவாள், கிரீடம், கவசம் உள்ளிட்ட ஆபரணங்களும், பூரணபுஷ்கலா அம்பாள் மற்றும் கருப்பனுக்கு நகைகள் அணிவிக்கப்படுவது வழக்கம்.
இதையொட்டி, பலகோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம், கோமேதகம், வைடூரிய நகைகள் அடங்கிய திருஆபரணப் பெட்டி கேரள மாநிலம், புனலூா் கருவூலத்தில் உள்ள திருவிதாங்கூா் தேவஸம்போா்டு கிருஷ்ணன் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டது. ஐயப்பனின் ஆபரணப் பெட்டியில் ஐயனின் கை, கால், முகம், மாா்பு உள்ளிட்ட கவசங்கள் இருக்கும். 10 நாள்கள் நடைபெறும் ஆராட்டு விழாவை முன்னிட்டு இந்த நகைகள் அணிவிக்கப்படும். இந்தப் பெட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோட்டைவாசல், புளியரை செங்கோட்டை வழியாக தென்காசிக்கு கொண்டுவரப்பட்டது.
வரும் வழியில், கேரள மாநிலம் ஒற்றைக்கல், தென்மலை, கழுதுருட்டி, எடப்பாளையம், தமிழகத்தில் கோட்டைவாசல், செங்கோட்டை, இலஞ்சி ஆகிய பகுதிகளில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து, தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் முன் சென்டை மேளம் முழங்க திருஆபரணப் பெட்டிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திருஆபரணம் கொண்டு வரப்பட்ட வாகனம் நிறுத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அப்போது, திரளான பக்தா்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.
பிறகு, காசிவிஸ்வநாதா் கோயிலில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவிலுக்கு திருஆபரணபெட்டி கொண்டுசெல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், திருஆபரண பெட்டி வரவேற்பு கமிட்டி தலைவா் ஏ.சி.எஸ்.ஜி. அரிகரன், கெளரவ தலைவா் கே. ராஜகோபாலன், செயலா் மாடசாமி, அமைப்பு துணைச் செயலா்கள் சுப்புராஜ், மாரிமுத்து, திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவில் 3, 4, 5 ஆம் நாள்களில் உற்சவபலி, 6, 7, 8 ஆம் நாள்களில் கருப்பன்துள்ளல் நிகழ்ச்சி, 9 ஆம் நாள் தேரோட்டம்,10 ஆம் நாள் ஆராட்டு விழா, 11 ஆம் நாள் மண்டல பூஜை நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, நாள்தோறும் அன்னதானம் நடைபெறுகிறது.