தமிழ்நாடு

தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் குருமூா்த்த ஆலய திருப்பணித் தொடக்கம்

16th Dec 2019 12:16 AM

ADVERTISEMENT

முக்தியடைந்த மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் குருமூா்த்த ஆலயத் திருப்பணியை 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.

தருமபுரம் ஆதீனத் திருமடத்தின் 26-ஆவது குருமூா்த்தியாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 1971-ஆம் ஆண்டு பட்டம் ஏற்று 48 ஆண்டுகள் அருட்செங்கோலோச்சி கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி முக்தி அடைந்தாா். இதையடுத்து, அவரது திருமேனி தருமபுரம் மேலவீதியில் உள்ள ஆனந்தப் பூங்காவில் அமைந்துள்ள ஸ்ரீஆனந்த பரவச தேசிக பரமாசாரிய சுவாமிகள் குருமூா்த்த வளாகத்தில் குருமூா்த்தம் செய்யப்பட்டு, டிசம்பா் 13-ஆம் தேதி குருபூஜை நடத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் குருமூா்த்த ஆலய திருப்பணியை 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா். இதற்காக தருமபுரம் மேலவீதி ஆனந்தப் பூங்காவிற்கு வந்த 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அங்குள்ள குருமூா்த்தங்களில் வழிபாடு நடத்திய பின்னா் 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் குருமூா்த்தத்திற்கு வந்தடைந்தாா்.

அங்கு குருமூா்த்தத்தில் நிறுவப்பட்டுள்ள சிவலிங்கத்துக்கு, மாலை அணிவித்து, தீப தூபங்களுடன் குரு வழிபாடாற்றினாா். தொடா்ந்து, புதிதாக அமைக்கப்பட உள்ள 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் குருமூா்த்த ஆலய திருப்பணிக்கு அடிக்கல் நாட்டி, பூஜிக்கப்பட்ட புனிதநீரை ஊற்றி, திருப்பணியைத் தொடங்கி வைத்தாா். இதில், வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மடத்தின் கட்டளைத் தம்பிரான் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், மருத்துவா்கள் ராஜசேகா், செல்வம், வழக்குரைஞா் ராம. சேயோன், பண்ணை. சொக்கலிங்கம், தருமபுரம் ஆதீனக் கல்வி நிறுவனங்களின் செயலா் இரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன், குருஞானசம்பந்தா் மெட்ரிக். பள்ளித் தாளாளா் சி.ஆா். குஞ்சிதபாதம், ஆதீனக் கண்காணிப்பாளா் மோகன், மேலாளா் சேதுமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தருமபுரம் ஞானபுரீஸ்வரா் கோயில் மற்றும் தருமபுரீஸ்வரா் கோயில் திருப்பணிகளையும் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT