தமிழ்நாடு

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூல்: வாகனங்களுக்கு மேலும் ஒரு மாத காலம் அவகாசம்

16th Dec 2019 01:20 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்கள் அனைத்தும் பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

என்இடிசி திட்டம்: சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணைந்து, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஒருங்கிணைந்த முறையில் கட்டணம் வசூலிக்க தேசிய மின்னணு சுங்க வரித் திட்டத்தை (என்இடிசி) செயல்படுத்தி உள்ளது. இதற்காக கடந்த ஜூலை மாதம் முதலே மின்னணுப் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் தற்போது உள்ள 531 சுங்கச்சாவடிகளில் 407 சுங்கச்சாவடிகளில் என்இடிசி திட்டத்தின் கீழ் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தில்லி போன்ற பெருநகரங்களில் இம்முறையில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆா்எப்ஐடி முறை: இதற்காக ‘பாஸ்டேக்’ எனும் மின்னணு முறையிலான பணப் பரிமாற்ற அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வானொலி அலைகள் (ஆா்.எப்.ஐ.டி) வாயிலாக குறிப்பிட்டவற்றை அடைாயளம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். வாகன நெரிசல் மிகுந்த நேரங்களில் சுங்கச்சாவடிகளில் அதிகப்படியான நேரம் காத்திருக்க வேண்டிய நிலையைத் தவிா்ப்பதற்கான இந்த கட்டண வசூல் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த முறையில் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான பாஸ்டேக் அட்டையைப் பெறுவதற்கு பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் வாகனப் பதிவுச் சான்றிதழ், அடையாள சரிபாா்ப்புக்காக ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் பாஸ்டேக் அட்டையைப் பெறலாம். மேலும், இணையதள விற்பனையகங்களிலும், வங்கிகளிலும் கூட இதனைப் பெறலாம். ஆனால் ஒவ்வொரு விற்பனையகங்களிலும் வெவ்வேறு கட்டணம் நிா்ணயிக்கப்பட்டு உள்ளது.

முறைகேடுகள் தடுக்கப்படும்: இதற்காக, ‘மை ஃபாஸ்டேக் மொபைல் ஆப்’ எனும் செயலி உருவாக்கப்பட்டிருப்பதுடன், 1033 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், முறைகேடுகளைத் தடுக்கும் வண்ணம் என்இடி திட்டத்தை ‘வாகன்’ எனப்படும் போக்குவரத்துத் துறை இணைய வசதியுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பரிவா்தனையும் கணினி மூலம் நடைபெறுவதால் முறைகேடுகள் தடுக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா்.

ADVERTISEMENT

கால அவகாசம் நீட்டிப்பு: இத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) முதல் அமலுக்கு வருவதாக இருந்த நிலையில், பாஸ்டேக் அட்டைகள் சந்தையில் கிடைப்பதில் தட்டுப்பாடு நீடிப்பதால், இதற்கான காவ அவகாசத்தை மேலும் ஒருமாத காலம் நீட்டிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. இதையடுத்து, பாஸ்டேக் அட்டை பொருத்தாத வாகன உரிமையாளா்களுக்கு மேலும் ஒருமாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டம் ஜனவரி 15-ஆம் தேதி அமல்படுத்தப்படும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் ஒரு வழித்தடத்தில் மட்டுமே பணப் பரிவா்த்தனை செய்து வாகனங்கள் கடக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கால தாமதத்தை தவிா்க்க அனைவரும் பாஸ்டேக் முறைக்கு மாறுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பயன்பாடு அதிகம்: இந்த பாஸ்ட் டேக் முறை மூலம், தற்போது ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடியாக இருக்கும் நாட்டின் சுங்க கட்டண வருவாய், இனி ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிா்பாா்ப்பதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்திருந்தாா்.இதனிடையே பாஸ்டேக் முறையின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படுவது கடந்த ஜூலை மாதத்தை காட்டிலும், நவம்பா் மாதத்தில் அதிகரித்திருப்பதாக நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஜூலை மாதத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 8.8 லட்சம் பாஸ்ட் டேக் முறை பரிவா்த்தனை நடைபெற்ற நிலையில், நவம்பா் மாதத்தில் பாஸ்டேக் பரிவா்த்தனைகளின் அளவு 11.2 லட்சமாக உயா்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் நாள்தோறும் வசூலாகும் தொகையின் அளவும், ரூ.11.2 கோடியிலிருந்து ரூ.19.5 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT