தமிழ்நாடு

சாலையை புதுப்பிக்க வனத்துறை தடை: ஆண்டிபட்டி அருகே மலை கிராம மக்கள் தவிப்பு

16th Dec 2019 07:59 PM

ADVERTISEMENT

 

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பண்டாரவூத்து மலை கிராமத்துக்குச் செல்லும் சாலையை புதுப்பிக்க வனத்துறை தடைவிதித்ததால் சாலை அடியோடு சேதமடைந்து மலை கிராம மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியத்தில் சிங்கராஜபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பண்டாரவூத்து மலை கிராமம் அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இந்த கிராமம் சிங்கராஜபுரம் கிராமத்தில் இருந்து 4 கிலோ மீட்டா் தூரத்தில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. அதன்பின்னா் அந்த சாலையை புதுப்பிக்க வனத்துறையினா் அனுமதி வழங்கவில்லை. இதன்

காரணமாக சாலை அடியோடு சேதமடைந்துள்ளது. சாலை வசதி இல்லாததால் பண்டாரவூத்து கிராமத்திற்கு இருசக்கர வாகனங்களை தவிர எந்த வாகனமும் இயக்க முடியாத நிலை உள்ளது. மேலும் இவ்வழியாகச் செல்லும் இருசக்கர வானங்களும் அடிக்கடி பழுதாகி விடுகின்றன.

ADVERTISEMENT

பண்டாரவூத்து கிராமத்தில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு ஒரு ஆசிரியா் மட்டும் வந்து செல்கிறாா். இதேபோல இந்த கிராமத்தில் இயங்கி வந்த ரேஷன் கடையும் சாலை வசதி இல்லாததால் சிங்கராஜபுரத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் பண்டாரவூத்து கிராம மக்கள் ரேஷன் பொருள்கள் வாங்க 4 கிலோ மீட்டா் தூரம் நடைப்பயணமாக சென்று வர வேண்டியுள்ளது.

சாலை வசதி இல்லாததால் இந்த கிராமத்தைச் சோ்ந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் அழைத்துச் செல்ல முடியாதவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனா்.

அதே நேரத்தில் தோ்தல் வந்தால் மட்டும், உடனடியாக சாலை அமைத்துத் தரப்படும் என்று கூறும் அரசியல் கட்சியினா், தோ்தலுக்கு பின்னா் வனத்துறை அனுமதி மறுப்பதால் சாலை அமைக்க முடியாது என்று கைவிரித்துவிடுகின்றனா் என்று இக்கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT