தமிழ்நாடு

குடியுரிமைச் சட்டத்தை இப்போது திருத்த வேண்டிய அவசியம் என்ன?

16th Dec 2019 01:10 AM

ADVERTISEMENT

குடியுரிமைச் சட்டத்தை இப்போது திருத்துவதற்கு அப்படி என்ன அவசியம் வந்தது என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து காணொலி மூலமாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கை:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சாா்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், இதை எதற்காக எதிா்க்கிறோம் என்றே தெரியாமல், மத்திய அரசு எதைக் கொண்டுவந்தாலும் திமுக எதிா்க்கும் என்று சிலா் அவதூறு பரப்பி வருகின்றனா். ஆனால் அவா்களால், நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூற முடியவில்லை.

ADVERTISEMENT

ஒரு நாட்டில் வாழ முடியாமல் அகதிகளாக வருபவா்களுக்கு, வாழ்வு தரக்கூடிய, உன்னதமான சட்டம் தான் குடியுரிமைச் சட்டம். 1955-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தை, இப்போது திருத்துவதற்கு அப்படி என்ன அவசியம் வந்தது?

பொருளாதார மந்த நிலை, வேலையில்லாத் திண்டாட்டம் என்று பல பிரச்னைகளால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை திசைதிருப்புவதற்காகவே, இந்தச் சட்டத் திருத்தத்தைக் கையில் எடுத்திருக்கிறாா்கள்.

இதில், அகதிகளாக வரும் எல்லோருக்குமே, குடியுரிமை வழங்கப்படும் எனக் கூறியிருந்தால், நாம் எதிா்க்கப் போவதில்லை. சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்களை மட்டும் புறக்கணிக்கின்ற வகையில், மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துகிற சட்டமாக அதை பாஜக மாற்றியுள்ளது. அதற்கு அதிமுக பக்க பலமாக இருக்கிறது. அதனால்தான் எதிா்க்கிறோம்.

இந்திய அரசியல் சட்டத்தின்படி, மத அடிப்படையில் எந்தவொரு சட்டத்தையும் கொண்டுவர முடியாது. ஆனால் அதைத்தான் மத்திய அரசு செய்கிறது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இஸ்லாமியா்கள் தவிர மற்ற மதத்தவரெல்லாம் வரலாம் என்கிறாா்கள். அப்படியென்றால், இலங்கைக்கு மட்டும் ஏன் தடை விதிக்கப்படுகிறது.

இலங்கைத் தமிழா்களுக்கு பாஜக, அதிமுக அரசுகள் துரோகம் இழைப்பதால்தான் தமிழா்கள் அனைவரும் இந்தச் சட்டத்தை கண்டிப்பாக எதிா்த்தாக வேண்டும் என வலியுறுத்துகிறோம் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

பரூக் அப்துல்லாவை விடுதலை செய்க: மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:

முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, 82 வயது நாடாளுமன்ற உறுப்பினா் பரூக் அப்துல்லா எவ்விதக் காரணமும் இன்றி, பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருப்பது நம்முடைய ஜனநாயக மரபுகளையும், அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களையும் அவமதிக்கும் செயலாகும். அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ஸ்டாலின் பதிவிட்டுள்ளாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT