தமிழ்நாடு

கட்டுப்படுத்த முடியாத சிறார் குற்றங்கள்

16th Dec 2019 02:00 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் சிறார் தொடர்புடைய குற்றங்கள் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு வளர்ந்து வருகிறது. மொத்தம் குற்ற சம்பவங்களில் சிறார் தொடர்புடைய குற்றங்கள் 2 சதவீதமாக உள்ளன.
சமூகத்தில் ஒருபுறத்தில் சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில், மற்றொரு புறம் சிறார் தொடர்புடைய குற்றச் சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் சிறார் தொடர்புடைய குற்றங்கள் 65 சதவீதம் உயர்ந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் ஆண்டுக்கு சிறார் தொடர்புடைய குற்றங்கள் சராசரியாக 2,200 வரை பதிவாகிறது என மாநில குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது. இதில் மாநிலத்தின் தலைநகரான சென்னையிலேயே அதிகப்படியான குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
சிறார் குற்றங்கள் தொடர்பாக பதியப்படும் வழக்குகளில் தேசிய அளவில் தில்லி, மும்பைக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் சென்னை உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கடந்த 2017-ஆம் ஆண்டு குற்ற வழக்குகளின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. சென்னைக்கு அடுத்ததாக பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்கள் உள்ளன.
ஏனெனில், சென்னையில் சிறார் தொடர்புடைய பல்வேறு குற்றச் சம்பவங்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு 391, 2017-ஆம் ஆண்டு 573, 2018-ஆம் ஆண்டு 553 என பதிவாகியுள்ளன. 2019-ஆம் ஆண்டு சிறார் குற்றங்களின் எண்ணிக்கை இதைவிட வேகமாக அதிகரித்து வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
சென்னையில் நடைபெறும் மொத்த குற்றச் சம்பவங்களில் சிறார் தொடர்புடைய குற்றங்கள் 2 சதவீதம் என்ற அளவில் இருப்பதாக பெருநகர காவல்துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இந்த நிலையிலேயே நீடிக்கிறது. சிறார் குற்றங்களில் ஈடுபடுபவர்களில் 70 சதவீதம் பேர், 16 வயதில் இருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்களே ஆவார்கள்.
பிரதான காரணங்கள்?: தேசிய அளவில் மொத்த குற்றங்களில், சிறார் குற்றங்களின் பங்கு 7.5 சதவீதமாகும். இதை ஒப்பிடும்போது தமிழகத்தில் நடைபெறும் சிறார் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என தமிழக காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறுகிறார்.
இருப்பினும், சென்னையில் கொலைச் சம்பவங்களில் 4 சதவீதம், வழிப்பறியில் 9 சதவீதம், திருட்டில் 6 சதவீதம், தங்கச் சங்கிலிப் பறிப்பு, செல்லிடப்பேசிப் பறிப்பில் 17 சதவீதம், பிற குற்றங்களில் 1 சதவீதம் என்ற அளவில் சிறார்களின் குற்றங்கள் உள்ளன. சிறார் தொடர்புடைய குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
இதில் சமூக-பொருளாதார மாற்றம், கலாசார மாற்றம், மாறி வரும் வாழ்க்கை முறை ஆகியவை பிரதான காரணங்களாக கூறப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாகவே காவல்துறை தொடர்பான காரணங்களை குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளையில், தொழில்நுட்ப வளர்ச்சியினால், முன்பை காட்டிலும் சிறார்கள் தவறான பாதைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இன்னும் விரிவாக திறந்துவிடப்பட்டுள்ளன. நாட்டின் நாளைய எதிர்காலமாக இருக்கும் சிறார்கள் சமூக விரோதிகளாக வளர்ந்தால், வரும் காலங்கள் எப்படி இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை என குழந்தைகள் நல ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். சமூகத்தின் புற்றுநோயாக கருதப்படும் சிறார் குற்றங்களுக்கு தீர்க்கமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஏற்றத்தாழ்வும், வறுமையும்: சமூகத்தில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வும், வறுமையும்தான் சிறார் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். வறுமையில் இருக்கும் பெற்றோரால் தங்களது குழந்தையை முறையாக பள்ளிக்கு அனுப்ப முடிவதில்லை. அவர்கள் தங்களது வறுமையால், குழந்தையின் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்துகின்றனர்.
இதனால் குழந்தைகள் இளம் வயதிலேயே வேலைக்கு செல்வதோடு, தவறான பாதைக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பெருநகரங்களில் குழந்தைகள் யாருடைய அரவணைப்பும் இன்றி உதிரியாக வளருகின்றன. இதை நோட்டமிடும் சமூக விரோத கும்பல்கள், தங்களது சட்டவிரோதச் செயல்களுக்கு அவர்களை பயன்படுத்துகின்றனர். மேலும் அவர்கள் குற்றங்கள் செய்ய சிறார்களைத் தூண்டுகின்றனர்.
இதைத் தடுப்பதற்கு சிறார் தொடர்புடைய சட்டங்களை அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும். சிறார் தொடர்புடைய திட்டங்களை செயல்படுத்துவதற்குரிய நிதியையும், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் உடனுக்குடன் அரசு வழங்க வேண்டும் என்று மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலர் கோ.சுகுமாரன் தெரிவித்தார்.
லாபம் சார்ந்த சமூகம்: இதேபோல, குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர் ஏ.ராயன் கூறியது:
பொருளாதார சூழ்நிலை, விளம்பர மோகம், தனியார் மயமாக்கல், வணிகமயமான கல்வி ஆகியவை நமது சமூகத்தில் பல்வேறு தீய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது குழந்தைகள்தான். சமூகத்தில் இப்போது குழந்தைகள் என்பது ஒரு முதலீடாகவும், பணம் ஈட்டும் கருவியாகவும் பார்க்கப்படுகிறது. இதற்காக தயார்படுத்தும் பணியில் ஒரு பெற்றோர், தங்களது குழந்தை பிறப்பில் இருந்தே ஈடுபடுகின்றனர்.
இதற்கு அறம் சார்ந்து இருந்த தமிழ்ச் சமூகம், இப்போது லாபம் சார்ந்த சமூகமாக மாறியதே முக்கிய காரணமாகும். இதனால், ஒரு குழந்தைக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்கள் கிடைப்பதில்லை. அதேபோல வணிகமயமான, பொருள் ஈட்டும் கல்வியால் ஒரு மாணவனுக்கு கிடைக்க வேண்டிய நல்லொழுக்கம், நீதி, கல்வி, வாழ்க்கை நெறிமுறைகள் ஆகியவை பள்ளிகளில் கிடைப்பதில்லை.
இது சமூகத்தை இக்கட்டான சூழ்நிலைக்கு இழுத்துச் செல்கிறது. இதன் ஒரு பகுதியே சிறார் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கியமான காரணமாகும். பள்ளிக்கு செல்லாத சிறார்கள் செய்யும் குற்றங்களின் விளைவுகளை விட, படிக்கும் மாணவர்களால் ஏற்படும் குற்றங்களின் விளைவும், வீரியமும் அதிகமாக உள்ளது. ஆனால் இத்தகைய குற்றங்கள் பெரும்பாலும் மூடி மறைக்கப்படுகின்றன.
குழந்தைகள் நட்பு சமூகம்: வளர்ந்த நாடுகளில் உள்ளதுபோல தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளும் வளர்ந்துள்ளன. ஆனால் ஒரு குழந்தைக்கு தேவையான சமூக பாதுகாப்பும், சுதந்திரமும் இன்னும் வழங்கப்படவில்லை. இது சிறார்கள் எளிதாக கெடுவதற்கும் வாய்ப்பு இருப்பதுபோல, அவர்கள் சீரழிவதற்கும் காரணமாக உள்ளது. சமூகத்தை மோசமாக கட்டமைக்கும்போது, சிறார்கள் தீய வழியில் செல்வதை சட்டங்கள் மூலமாக மட்டும் தடுக்க முடியாது.
இச் சூழ்நிலைகள் மாறினால் மட்டுமே சிறார் குற்றங்களைத் தடுப்பதற்குரிய நிரந்தர தீர்வுகளை அடையாளம் காண முடியும். முதலில் நமது சமூகம், குழந்தைகளின் நட்பான சமூகமாக இருக்க வேண்டும்.
இதற்கான அடிப்படை தேவைகளைக் கல்வித்துறையில் மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலும் ஏற்படுத்தித் தர அரசு முன்வர வேண்டும். அதேவேளையில் சமூகத்தில் குழந்தைகளை முதலீட்டு கருவியாக பார்ப்பதை பெற்றோர்கள் மாற்ற வேண்டும். அப்போதுதான், வலிமைமிக்க சமூகத்தை உருவாக்க முடியும் என்றார் அவர்.


-கே. வாசுதேவன்

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT