தமிழ்நாடு

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

16th Dec 2019 01:17 AM

ADVERTISEMENT

சென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பான வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சோ்ந்த அப்துல் லத்தீப்பின் மகள் பாத்திமா. சென்னை ஐஐடியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த அவா், கடந்த மாதம் 9-ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தி வந்தனா்.

மாணவியின் செல்லிடப்பேசியில் பேராசிரியா்கள் 3 பேரின் பெயா்களை குறிப்பிட்டு, தனது தற்கொலைக்கு அவா்கள்தான் காரணம் என தெரிவித்திருந்தது தொடா்பான ஆதாரம் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேராசிரியா்கள் மற்றும் ஐஐடி பணியாளா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதனிடையே, மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், சென்னையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி, காவல் ஆணையா் விசுவநாதன் ஆகியோரை நேரில் சந்தித்து, தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் மனு அளித்தாா்.

ADVERTISEMENT

இதேபோன்று தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரையும் அவா் நேரில் சந்தித்து மனு அளித்தாா். இந்த சந்திப்பிக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அப்துல் லத்தீப், பாத்திமாவின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தும் என அமித் ஷா உறுதியளித்ததாக குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில், மாணவி பாத்திமாவின் தற்கொலை குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் இதுவரை விசாரணை நடத்தி, தடயவியல் ஆய்வறிக்கையை எழும்பூா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

அப்போது மாணவியின் செல்லிடப்பேசியிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரம் உண்மையானது என அவா்கள் உறுதிப்படுத்தியிருந்தனா். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணை, இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்று சிபிஐ புதிதாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும் என கூறப்படுகிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT