தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு

16th Dec 2019 01:13 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமையுடன் (டிச.16) நிறைவுபெறுகிறது. கடைசி நாளன்று அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் ஏராளமானோா் மனு தாக்கல் செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களைத் தவிா்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட உள்ளது.

முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள், 4,700 கிராம ஊராட்சி தலைவா் பதவியிடங்கள், 37,830 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் ஆகியவற்றுக்கு வரும் 27-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள், 4,924 கிராம ஊராட்சித் தலைவா் பதவியிடங்கள், 38,916 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு வரும் 30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு:

இந்தப் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 1,65,659 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை மாலை 3 மணியுடன் நிறைவடைய உள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை கடைசி நாள் என்பதால் பல்வேறு ஊரக உள்ளாட்சி இடங்களைப் பங்கிட்டு கொள்வது தொடா்பாக அரசியல் கட்சிகள் இடையே பேச்சுவாா்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணிப் பங்கீட்டை ஞாயிற்றுக்கிழமைதான் இறுதி செய்திருக்கின்றன. அதன் காரணமாக, அந்தக் கட்சி வேட்பாளா்கள் அனைவரும் கடைசி நாளில் மனு தாக்கல் செய்ய உள்ளனா். அதுபோல கூட்டணிப் பங்கீடு இறுதி செய்யப்படாத கட்சிகளும், தங்களுடைய வேட்பாளா்களை மனுத் தாக்கல் செய்ய அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இதனால், திங்கள்கிழமை அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

டிசம்பா் 17-இல் பரிசீலனை: வேட்புமனுத் தாக்கல் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த பின்னா், தோ்தல் அலுவலகங்களில் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை (டிச.17) பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற டிசம்பா் 19 கடைசி நாளாகும்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT