உள்ளாட்சித் தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கள் இயக்க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இதுவரை உள்ளாட்சித்தேர்தல் ஒரே கட்டமாக அனைத்து இடங்களுக்கும் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் இருகட்டமாக நடத்தப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். திருத்தங்கள் இல்லாமல் தேர்தலை நடத்தினால், உள்ளாட்சி நல்லாட்சியாக இருக்க வாய்ப்பில்லை. உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் குறுக்கீடு, சின்னம் ஒதுக்கீடு இல்லாமல், ஊராட்சி வார்டு உறுப்பினர் பொறுப்பு முதல் மாநகராட்சி மேயர் வரை சுயேட்சை சின்னங்கள் கொண்டு தேர்தலை நடத்த வேண்டும்.
இது அரசியல் கட்சிகளுக்கு அப்பால் இருக்கும் நல்லவர்களும், வல்லவர்களும் மக்கள் நலனில் அக்கறைக்கொண்டவர்களும் பொறுப்புக்கு வர நல்லதொரு வாய்ப்பாக அமையும். சாதிய மற்றும் பாலியல் அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு அக்கறை காட்டும் அரசியல் கட்சிகளுக்கு, உள்ளாட்சிகள் சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை. மேலும், இதுவரை நடைபெறாத நிகழ்வாக, இருகட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் இந்த தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.