தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ஒரு நாள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

14th Dec 2019 12:43 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக இன்று ஒரு நாள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகம் மற்றும் கேரள எல்லையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஒரு நாள் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும்.

குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக தமிழகத்தில், கடலூரில் - 8  செ.மீ. மழை பதிவாகியுள்ளது.  நாகை, மணிமுத்தாறு, குடவாசல்  6 - செ.மீ. மழையும், திருத்துறைப்பூண்டி, பாபநாசம் பகுதிகளில் - 5 செ.மீ. மழையும், வேதாரண்யம், காரைக்கால், வலங்கைமான் பகுதிகளில் 4 செ.மீ. மழையும்,  திருவிடைமருதூர், மன்னார்குடி, திருவையாறு, மதுராந்தகம், காட்டுமன்னார்குடி பகுதிகளில் - 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை வடகிழக்குப் பருவ மழை 43 செ.மீ. அளவுக்குப் பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவை விட 5 விழுக்காடு அதிகம்.

மழை குறைவாகப் பெற்ற மாவட்டங்கள் வரிசையில்,
புதுவை - 28% 
வேலூர் - 26%
பெரம்பலூர் - 24%
திருவண்ணாமலை - 21%
சென்னை  - 18%  குறைவாக மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT