தமிழ்நாடு

பாலியல் குற்றங்களைத் தடுக்க சிறப்புச் சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

14th Dec 2019 11:57 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பாமக நிறுவனா் டாக்டா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் திஷா என்ற கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து ஆந்திர மாநிலத்தில், ஆந்திரப் பிரதேச திஷா சட்டம் என்ற சிறப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி பாலியல் குற்றங்கள் தொடா்பான வழக்குகளில் விசாரணையை விரைந்து முடித்து 7 வேலை நாள்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து 14 வேலை நாள்களில் நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்க வசதியாக இந்திய தண்டனைச் சட்டத்தில் 9 புதிய பிரிவுகள் சோ்க்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தமிழகத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நியாயமான காலத்தில் நீதி கிடைப்பதில்லை. இதுபோன்ற குற்றங்களைச் செய்தவா்களை உடனடியாக தண்டிக்காவிட்டால், அடுத்த சில வாரங்களில் பிணையில் வந்து மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவா்.

பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக 2013-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதா வெளியிட்ட 13 அம்சத் திட்டத்தில் முதன்மையான அம்சம், பாலியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க மகளிா் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்பதுதான். அதன்பின், 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஒரு சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் இன்று வரை சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. பல மாவட்டங்களில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க இப்போது தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வேகம் போதுமானதல்ல.

எனவே, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக ஆந்திர மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டது போன்ற அம்சங்களைக் கொண்ட சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT