தமிழ்நாடு

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஞானபீடம் ஏற்பு: ஆதீன கர்த்தர்கள், முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு

14th Dec 2019 12:09 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெள்ளிக்கிழமை ஞானபீடம் ஏற்றார். இந்நிகழ்வில், மதுரை ஆதீன குருமகா சந்நிதானம் உள்பட பல்வேறு ஆதீன கர்த்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். 
இந்தியாவின் தொன்மையான சைவத் திருமடங்களுள் ஒன்றாகவும், சைவமும் தமிழும் இனிதே தழைத்தோங்குக என்ற கோட்பாட்டுடன் சமய வளர்ச்சியிலும், தமிழ் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றி வரும் ஆதீனமாகவும் விளங்குகிறது தருமபுரம் ஆதீனம்.  

இந்த ஆதீனத்தின் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ  சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் டிசம்பர் 3-ஆம் தேதி முக்தியடைந்ததையடுத்து, ஆதீனத்தின் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், தருமையாதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக வெள்ளிக்கிழமை  ஞானபீடம் ஏற்றார்.
முக்தியடைந்த தருமையாதீன 26-ஆவது குருமகா சந்நிதானம், தனக்குப் பின்னர் தருமையாதீன நிர்வாக பீடத்தை ஏற்கும் வகையில், ஆதீனத்தின் இளைய சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளுக்கு 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி பட்டம் சூட்டினார். இதனடிப்படையில், ஆதீனத்தின் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக ஞானபீடம் ஏற்றார்.

இதற்கான நிகழ்ச்சி, தருமை ஆதீனத்தின் பண்டாரக்கட்டில் நடைபெற்றது. பகல் 12.05 மணிக்கு, ஆதீனத்தின் தொன்மை மரபுப்படி, ஓலைச்சுவடியில் தங்க எழுத்தாணியைக் கொண்டு கையெழுத்திட்டு, தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஞானபீடம் ஏற்றார். 
இதைத் தொடர்ந்து, ஞானபீடம் ஏற்ற குருமகா சந்நிதானத்துக்கு, திருவையாறு ஆதீன இளவரசு தீபாராதனையுடன் குரு வழிபாடாற்றினார். 
பின்னர், தருமையாதீனத்துக்குச் சொந்தமான 27 திருக்கோயில்களிலிருந்தும், காஞ்சி மடத்தின் சார்பிலும் குருமகா சந்நிதானத்துக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

ஆதீன கர்த்தர்கள் பங்கேற்பு: இந்நிகழ்வில், மதுரை ஆதீன குருமகா சந்நிதானம் அருணகிரிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய  சுவாமிகள், கோவை கௌமார மடம் குமரகுருபரர் சுவாமிகள், மயிலம் ஆதீனம் சிவஞான பாலையா சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்,  திருவாவடுதுறை கட்டளை விசாரணை ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள்,  வைத்தீஸ்வரன்கோயில் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருநள்ளாறு கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான், வேளாக்குறிச்சி ஆதீன இளவரசு அஜபா நடேசுவர சுவாமிகள், தருமபுரம் ஆதீன கட்டளைத் தம்பிரான்கள் மீனாட்சி சுந்தரம் தம்பிரான், சொக்கநாத தம்பிரான், சட்டநாத தம்பிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ADVERTISEMENT

முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு: மேகாலய மாநில முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் கே. ராஜேந்திரன், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தர் சேதுராமன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செ. ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வீ. ராதாகிருஷ்ணன், பி.வி.பாரதி, கோவி. செழியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெக. வீரபாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் இளையராஜா உள்பட திரளானோர் கலந்துகொண்டு, குருமகா சந்நிதானத்திடம் ஆசி பெற்றனர்.

குருபூஜை....: முன்னதாக, தருமையாதீன வளாகத்தில் உள்ள மேலகுருமூர்த்தம், ஆனந்தபரவசர் பூங்காவில், 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் திருமேனி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டு, குருபூஜை நடைபெற்றது. 
ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்,  பல்வேறு வகையான வாசனை திரவியங்களையும், மங்கலப் பொருள்களையும் கொண்டு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரங்கள் சாற்றி,  ருத்திராட்சம் மற்றும் வில்வ மாலைகள் அணிவித்தார். பின்னர்,  ஓதுவா மூர்த்திகள் தேவார பஞ்சாட்சர பதிகங்களைப் பாட, மேள, தாள முழக்கங்களுடன் மகா தீபாராதனை காண்பித்து, குருபூஜை வழிபாடாற்றினார். 

இதைத்தொடர்ந்து,  தருமபுரம் ஆதீன வளாகத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் வாசலில் நடைபெற்ற கோ பூஜை மற்றும் கஜ பூஜையில் அவர் பங்கேற்றார். 
வாழ்க்கை குறிப்பு: தருமையாதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக ஞானபீடம் ஏற்றுள்ள ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்,  கடலூர் மாவட்டம், எருக்கத்தம்புலியூரில் மறைஞானசம்பந்தம் பிள்ளை - அலர்மேல்மங்கை தம்பதியரின் முதல் மகனாக 1965-இல் பிறந்தவர்.  இயற்பெயர் வேல்முருகன். 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை (எம்.ஏ.) பட்டம் பெற்ற இவர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் நிறைவு செய்தவர். 
தருமையாதீன 26-ஆவது குருமகா சந்நிதானத்திடம் சமய, விசேட, நிர்வாண தீட்சைகள் பெற்று, 1988-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை திருப்பனந்தாள் காசிமடத்தின் காறுபாறுவாகவும், திருப்பனந்தாள் கல்லூரிப் பேராசிரியராகவும், செயலாளராகவும் பணியாற்றியவர்.  திருநெல்வேலி, திருவையாறு, திருச்சிராப்பள்ளி, உய்யக்கொண்டான் திருமலை கோயில்களில் கட்டளை விசாரணையாகவும் ஏற்கெனவே பொறுப்பு வகித்தவர். 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். 
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற கருத்தரங்கங்களில் பங்கேற்று கட்டுரைகளைப் படைத்துள்ளார். 
சமய நூல்கள், சிறுவெளியீடுகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்தவர்.  2000 -ஆம் ஆண்டு வரை "குமரகுருபரர்'  இதழின் சிறப்பாசிரியராகவும்,  2006-ஆம் ஆண்டு  முதல் தருமை ஆதீனத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான "ஞானசம்பந்தம்" மாத இதழின் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தவர்.  
40-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்குச் சென்று சைவ சமய, சமுதாய, இலக்கியப் பணிகளை மேற்கொண்டவர். 
கார்கில் போர் மற்றும் இயற்கை பேரிடர் கால பாதிப்புகளுக்காக பல லட்சம் நிதி திரட்டி வழங்கியவர். 
தஞ்சையில் நடைபெற்ற 6-ஆவது உலக சைவ மாநாட்டையும், தருமையாதீனத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்ற 4-ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டையும் நடத்தியவர்.  மேலும், சிதம்பரம் மற்றும் சென்னையில் நடைபெற்ற திருமுறை வெளியீட்டு விழாக்களை சிறப்பாக நடத்தியவர். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT