தேனி தொகுதி மக்களவைத் தேர்தல் தொடர்பாக ரவீந்திரநாத் வருகிற 30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார். இவர், தனது தொகுதி மக்களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும், ரவீந்திரநாத் பதில் அளிக்காததால் மனுதாரர் தரப்பில் இருந்து இன்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. நோட்டீஸ் அனுப்பி 4 மாதங்களாகியும் பதில் அளிக்காத தேனி எம்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, இன்றைய வழக்கின் விசாரணையில், ரவீந்திரநாத்திற்கு இறுதியாக காலக்கெடு விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கு தொடர்பாக வருகிற டிசம்பர் 30-ம் தேதிக்குள் பதில் மனு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.