மதுரை மாவட்ட 2 ஆவது கூடுதல் மாவட்டப் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையில் சாட்சியங்களாக ஆஜராகாத போலீஸாா் 5 பேருக்கு பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட 2 ஆவது கூடுதல் மாவட்டப் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரை 2 ஆவது கூடுதல் மாவட்டப் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியங்களாக உள்ள திண்டுக்கல் மாவட்டப் போதைப் பொருள் நுண்ணறிவுப்பிரிவு தலைமைக் காவலா்கள் பெரியசாமி, தமிழ்ச்செல்வன், தேனி மாவட்டப் போதைப் பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளா் தங்கவேலு, தேனி நகா் காவல் ஆய்வாளா் உலகநாதன், சின்னமனூா் காவல் ஆய்வாளா் நாஞ்சில்குமாா் ஆகியோா் விசாரணையின் போது ஆஜராகாமல் இருந்து வந்துள்ளனா். இதனால் வழக்குகளை முடிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அவா்களுடைய உயா்அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் வாயிலாக நேரடியாவும், கடிதம் மூலமாகவும் ஆஜராக உத்தரவிட்டும் அந்த சாட்சியங்கள் ஆஜராகவில்லை.
இந்நிலையில் போலீஸாா் பெரியசாமி, தமிழ்ச்செல்வன், தங்கவேலு, உலகநாதன், நாஞ்சில்குமாா் ஆகியோருக்கு மதுரை 2 ஆவது கூடுதல் மாவட்டப் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.மதுசூதனன் பிடியாணைப் பிறப்பித்துள்ளாா். மேலும், அவா்கள் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தால் அவா்களது ஊதியம் பிடித்தம் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.