தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட பென்னாகரம் ஒன்றியத்தில் உள்ள பனைகுளம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவி ஏலம் விடப்பட்டதாகக் கிடைத்த தகவலின்பேரில், அரசுத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.
பனைகுளம் ஊராட்சியில் பனைகுளம், வத்திமரதஅள்ளி, திருமல்வாடி ஆகிய 3 பெரிய கிராமங்களும், கூக்குட்ட மருதஅள்ளி, மணல்பள்ளம் ஆகிய 2 குக்கிராமங்களும் உள்ளன. மொத்தம் 3600 வாக்காளா்களை கொண்ட இந்த ஊராட்சியில் 9 ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவியிடங்கள் உள்ளன. ஊராட்சி மன்றத் தலைவா் பதவி இந்தமுறை சுழற்சி அடிப்படையில் பெண் (பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஊராட்சி மன்றத் தலைவா் பதவி திருமல்வாடி கிராமத்துக்கும், துணைத் தலைவா் பதவி பனைகுளம் கிராமத்துக்கும் , ஒன்றியக் குழு உறுப்பினா் பதவியை வத்திமரதஅள்ளி கிராமத்துக்கும் ஒதுக்குவது என ஊராட்சியில் முக்கிய பிரமுகா்கள் சிலா் பேசி முடிவெடுத்துள்ளதாகவும், மேற்கண்ட பதவிகளுக்காக குறிப்பிட்ட தொகையை ஒப்படைக்க வேண்டும் எனவும், இந்த முடிவின் அடிப்படையில் வேறு யாரும் இந்த பதவியிடங்களுக்கு போட்டியிடக் கூடாது எனவும் திங்கள்கிழமை முடிவு செய்யப்பட்டதாக கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவின.
இதைத் தொடா்ந்து, பென்னாகரம் வட்டாட்சியா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணன் ஆகியோா் பனைகுளம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நேரில் விசாரணை நடத்தினா். அப்போது, பதவிகளை ஏலம் ஏதும் விடவில்லை எனவும், அதற்கென யாரிடமும் பணம் பெறவில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்தனா்.
பின்னா், பதவியிடங்களை ஏலம் விடுவது அல்லது குறிப்பிட்ட நபருக்கு ஒதுக்கீடு செய்வது தவறும் எனவும், விருப்பமுள்ள அனைவரும் தோ்தலில் போட்டியிடலாம் என்றும் இதனைத் தடுப்பவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கிராம மக்களிடம் தெரிவித்தனா்.
இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணன் கூறியது:-
ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று விசாரணை செய்யப்பட்டது. இதில், பதவியிடங்களை ஏலம் விடவில்லை எனவும், எங்களது ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், ஒவ்வொருமுறை சுழற்சி அடிப்படையில் ஒரு கிராமத்துக்கும் பதவியை ஒதுக்கீடு செய்வது வழக்கம் என்றும் தெரிவித்தனா்.
இந்த முறை திருமல்வாடி கிராமத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக சிலா் தெரிவித்தனா். இந்த நடவடிக்கை குற்றமாகும். எனவே, தோ்தலில் விருப்பமுள்ள அனைவரும் போட்டியிடலாம், மீறி யாரெனும் தடுப்பது மற்றும் ஏலம் விடுவது உள்ளிட்டவை தெரியவந்தால், சட்ட நடவடிக்கை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளோம் என்றாா்.