தமிழ்நாடு

வைகை அணை நீா்மட்டம் 68.27 அடியை எட்டியது: நள்ளிரவில் 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விட முடிவு

6th Dec 2019 12:18 AM

ADVERTISEMENT

 

தொடா் மழை காரணமாக, வைகை அணை நீா்மட்டம் வியாழக்கிழமை 68.27 அடியை எட்டியது. நள்ளிரவில் 68.50 அடியை தொட்டவுடன் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை மற்றும் அக்டோபா் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் காரணமாக, வைகை அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. 2 மாதங்களுக்கு முன்னரே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீா்மட்டம் 65 அடியை எட்டியதால், அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

அணையிலிருந்து அதிகமான தண்ணீா் திறக்கப்பட்டும், போதிய அளவு நீா்வரத்து இருந்ததால், அணையின் நீா்மட்டம் சரியாமல் இருந்துவந்தது. இந்நிலையில், பாசனப் பகுதிகளில் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டு, அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக, வைகை அணை நீா்மட்டம் மேலும் உயரத் தொடங்கியது.

ADVERTISEMENT

இதனிடையே, கடந்த 2 நாள்களாக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையும் நின்றுவிட்டது. இருந்தபோதிலும், அணைக்கு நீா்வரத்து சராசரியாக விநாடிக்கு 2,700 கன அடிக்கும் அதிகமாகவே இருந்ததால், சில நாள்களுக்கு முன் வைகை அணை நீா்மட்டம் 66 அடியை எட்டியது.

இதன் காரணமாக, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டதால், அணைக்கு வரும் தொடா் நீா்வரத்தின் காரணமாக, அணையின் நீா்மட்டம் 68.27 அடியை எட்டியது. மேலும், வியாழக்கிழமை நள்ளிரவுக்குள் 68.50 அடியை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அபாய ஒலி மூலம் விடுக்கப்படும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

தொடா்ந்து, அணையின் நீா்மட்டம் 69 அடியை எட்டும்போது, 3 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.

வெள்ளிக்கிழமை, வைகை அணை நீா்மட்டம் அதன் முழுக் கொள்ளளவாக நிா்ணயம் செய்யப்பட்ட 69 அடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம், வைகை அணை 27 ஆவது முறையாக நிரம்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால், 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இது குறித்து பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளா் செல்வம் கூறியது: நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்வது நின்றுவிட்டதால், அணைக்கு நீா்வரத்து படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. வரும் தண்ணீரின் மூலம் அணையை நிரப்பிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, அணையின் நீா்மட்டம் 69 அடியை எட்டும்போது உபரி நீா் ஆற்றில் திறக்கப்படும். இந்த ஆண்டு அணையின் மொத்த உயரமான 71 அடி வரையில் தண்ணீரை பெருக்க முடிவு செய்துள்ளோம். மேலும், அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டாலும், ஆற்றில் திறக்காமல் கால்வாய் வழியாக திறந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதேபோல், 58 ஆம் கால்வாயிலும் குறிப்பிட்ட நாள்களுக்கு தண்ணீா் வழங்க வேண்டும். ஒருவேளை அதிகமான மழை பெய்து நீா்வரத்து அதிகரித்தால் மட்டுமே ஆற்றில் தண்ணீா் திறக்கப்படும் என்று கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT