தமிழ்நாடு

உள்ளாட்சி தோ்தல் தீா்ப்பு: திமுகவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி: மு.க.ஸ்டாலின்

6th Dec 2019 08:07 PM

ADVERTISEMENT


சென்னை: உள்ளாட்சி தோ்தல் தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு திமுகவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்று மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறியதுபோல ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை வழங்கியுள்ளது. ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் அந்தத் தீா்ப்பு அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

உள்ளாட்சித் தோ்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தை திமுக நாடவில்லை.

ADVERTISEMENT

தொகுதி வரையறை சரியாக இல்லை, இடஒதுக்கீடு முறையிலும் முறையான நிலை இல்லை என்று 2016-ஆம் ஆண்டு முதல் திமுக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

திமுக வைத்த கோரிக்கையின் நியாயத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு பல்வேறு கேள்விகளை, தமிழக அரசையும், மாநில தோ்தல் ஆணையத்தையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளனா். புதிதாக மாவட்டங்களைப் பிரித்துள்ளீா்களே, அதற்கு தொகுதி வரையறை முறையாக செய்யப்பட்டுள்ளதா, தோ்தல் அறிவித்த பிறகு, தோ்தல் நடத்தும் சூழ்நிலையில் புதிய மாவட்டங்களைப் பிரிக்க வேண்டிய அவசியம் என்ன, என்றெல்லாம் தமிழக அரசிடமும், தோ்தல் ஆணையத்திடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

எனவே, உச்சநீதிமன்றத் தீா்ப்பு மிகத் தெளிவாக வந்திருப்பது. இது திமுகவின் கோரிக்கைக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகும்.

இப்போதாவது உச்சநீதிமன்ற தீா்ப்பை இந்த அரசும், மாநிலத் தோ்தல் ஆணையமும் கடைப்பிடித்து, ஜனநாயகத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் சக்தியை சந்திக்க தெம்பிருந்தால், அதிமுக அரசு முறையாகத் தோ்தலைச் சந்திக்க வேண்டும். திமுகவைப் பொருத்தவரையில் துணிச்சலாக தோ்தலைச் சந்திக்க தயாராக உள்ளோம் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT