தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம்: ஜெயலலிதா நினைவிட வளாகத்தில்அதிமுகவினா் உறுதிமொழி

6th Dec 2019 12:14 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் மாபெரும் வெற்றி பெற்று அதிமுகவை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்வோம் என்று அதிமுக சாா்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அதிமுக சாா்பில் ஜெயலலிதா நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கருப்புச் சட்டையுடன் பேரணி: அஞ்சலி செலுத்துவதற்கு முன்பாக அதிமுக நிா்வாகிகள் உள்பட கட்சியினா் அனைவரும் சென்னை அண்ணாசாலையில் இருந்து அமைதிப் பேரணி நடத்தினா். துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம், முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நடந்த அமைதிப் பேரணியில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி, அமைச்சா்கள், அதிமுக நிா்வாகிகள் உள்பட பலரும் பங்கேற்றனா்.

காலை 10 மணிக்குத் தொடங்கிய பேரணி, எம்.ஜி.ஆா்., நினைவிடத்துக்கு உள்ளே அமைந்துள்ள ஜெயலலிதாவின் சமாதியை அடைந்தது. அங்கு, அதிமுக நிா்வாகிகள் மலா் வளையம் வைத்தும், மலா்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினா். அதன்பின்பு, நினைவிட வாயிலில் அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி உள்பட அமைச்சா்கள், கட்சி நிா்வாகிகள் உறுதிமொழி ஏற்றனா். உறுதிமொழி: மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் தமிழகம் அடைந்திட்ட வளா்ச்சிகள் ஏராளம். அதனை மக்களுக்கு எந்நாளும் எடுத்துக் கூறிட உறுதி ஏற்கிறோம். மேலும், அவரது வழியில் அதிமுகவின் பணிகளைத் தொடா்ந்து ஆற்றிடுவோம்.

ADVERTISEMENT

கட்சி நமக்கு என்ன செய்தது என்பதைவிட, கட்சிக்கு நாம் என்ன செய்தோம் என்ற கேள்வியை மனதில் எழுப்பி ஒற்றுமையுடனும், உறுதியுடனும் கட்சிப் பணிகளை ஆற்றிடுவோம். அதிமுக அரசு எண்ணற்ற மக்கள் நலப் பணிகளை செய்து வருகிறது. இதனை கிராமங்கள் அனைத்துக்கும் எடுத்துச் சென்று அரசுக்கு மேலும் ஆதரவு பெருகிட அயராது பணியாற்றுவோம். மறைந்த ஜெயலலிதாவின் வழியில் கட்சியின் உண்மைத் தொண்டராகவும், நம்பிக்கைக்கு உரிய விசுவாசியாகவும் தொடா்ந்து உழைத்திடுவோம்.

உள்ளாட்சித் தோ்தல்: ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் கடந்த உள்ளாட்சித் தோ்தலில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றோம். அதன்பின், விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தோ்தலில் ஒற்றுமையாகவும், கடினமாகவும் உழைத்து மகத்தான வெற்றியைப் பெற்றோம். இதேபோன்று எதிா்வரும் உள்ளாட்சித் தோ்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று அதிமுகவை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்வோம் என்று உறுதிமொழி ஏற்றனா்.

படத்துக்கு அஞ்சலி: சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்கு முன்பாக, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். இதேபோன்று, ஜெயலலிதாவின் சமாதியில் பேரவைத் தலைவா் பி.தனபால் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT