தமிழ்நாடு

மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனம் நியமனம்: இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

30th Aug 2019 01:31 AM

ADVERTISEMENT


மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனம் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் மதுரை ஆதீனம் பதிளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த வீரமுருகன் தாக்கல் செய்த மனு: நான் சைவ நெறி மீட்புப் பேரவை அமைப்பு மூலம் சமூகசேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். மதுரை ஆதீன மடம் 6 -ஆம் நூற்றாண்டில் தொடக்கப்பட்டு, தற்போது இந்து சமய அறநிலையத்துறை, குருமகா சந்நிதானத்தின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூன் மாதம் மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக சுந்தரமூர்த்தி தம்பிரான் என்பவரை, மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் நியமித்துள்ளார். 
இந்த நியமனம் இந்துசமய அறநிலைத்துறை விதிகளுக்கு புறம்பானது. திருவாவடுதுறை ஆதீன மடத்தைச் சேர்ந்தவரை மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நியமித்திருப்பது விதிமீறலாகும். 
இதுகுறித்து இந்துசமய அறநிலைத்துறை ஆணையருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனம் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆதீனம்  ஆகயோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT