தமிழ்நாடு

புதுவையில் பால் விலை ரூ. 6 உயர்வு: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

30th Aug 2019 01:56 AM

ADVERTISEMENT


புதுவையில் பால் விற்பனை விலையை ரூ.6 உயர்த்தி, முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை (ஆக.30) நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி பால் விலை உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது: புதுவையில் உள்ள பால் கூட்டுறவுச் சங்கங்கள், பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஏனெனில், பால் கொள்முதல் விலை 2014-ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பின்னர், தற்போது வரை உயர்த்தப்படவில்லை.
இந்த ஐந்து ஆண்டுகளில் மாட்டுத் தீவனம், பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு, பிண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் பராமரிப்புச் செலவுகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன. எனவே, புதுவையில் உள்ள பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், பால் உற்பத்தித் தொழிலில் லாபம் பெறவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, புதுவையில் கூட்டுறவு பால் சங்கங்களுக்கு வழங்கும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 30-இல் இருந்து ரூ. 34 ஆக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு ரூ. 4 உயர்த்தி வழங்கப்படும்.
இந்த விலை உயர்வின் மூலம் ஆவின் கொள்முதல் விலையைவிட ரூ. 2 கூடுதலாக புதுவை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும். இதனால், புதுவையில் உள்ள 100 கூட்டுறவு பால் சங்கங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர். புதுவையில் உள்ள பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, நுகர்வோர்களுக்கு தரமான பால் தொடர்ந்து விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில், பால் பண்ணையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கடந்த 5 ஆண்டுகளில் பதப்படுத்தும் செலவு போக்குவரத்து, அலுவலகச் செலவு ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளதாலும், பாண்லேவின் பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பாண்லேவில் சமன்படுத்திய பால் லிட்டர் ஒன்றுக்கு (டோன்ட் மில்க்) ரூ. 36-இல் இருந்து ரூ. 42, சிறப்புக் கூறு  பால் (ஸ்பெஷல் டோன்ட் மில்க்) ரூ. 38-இல் இருந்து ரூ. 44,  நிலைபடுத்திய பால் (ஸ்டேண்டர்டைஸ்ட் மில்க்) ரூ. 42-இல் இருந்து ரூ. 48 என விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படும்.
இந்த விலை உயர்வு அனைத்து வகையான பாலுக்கும் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 6 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பால் கொள்முதல், விற்பனை விலை உயர்வு வெள்ளிக்கிழமை (ஆக. 30)  அமலுக்கு வருகிறது என்றார் முதல்வர் நாராயணசாமி.

ADVERTISEMENT
ADVERTISEMENT