நிகழாண்டில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்பட நான்கு இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தொல்லியல் துறையின் ஆணையாளர் த.உதயச்சந்திரன் வெளியிட்ட தகவல்:
தமிழகத்தில் வைகைக் கரையில் சங்க கால நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் கீழடியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுப் பணிகள் மொத்தமாக ரூ.1.02 கோடியில் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு தரப்பினரும் கோரிக்கை: தமிழகத்தில் எண்ணற்ற இடங்களில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ள வேண்டுமென பொது மக்களும், ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் தமிழகத்தின் பண்பாடு மரபை வெளிக் கொணரும் வகையில் மாநிலத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையான தொடர் தொல்லியல் கள ஆய்வுகள், அகழாய்வுகள் மேற்கொள்ள தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
எந்தெந்த இடங்களில் ஆய்வு: நிகழாண்டில் தமிழகத்தில் நான்கு முக்கிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதன்படி, சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள இடங்கள், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், ஈரோடு மாவட்டம் கொடுமணல், தூத்துக்குடி மாவட்டம் சிவகளை ஆகிய இடங்களில் நிகழாண்டில் அகழாய்வுப் பணிகள் செய்யப்பட உள்ளன.
இதேபோன்று, சில மாவட்டங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரலாற்றுக்கு முந்தைய கால தொல்லியல் இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளவுள்ள இடங்களைக் கண்டறிவதற்கு விரிவான களஆய்வு செய்யப்படும்.
தென் மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியாக விளங்கும் தாமிரவருணி ஆற்றங்கரை நாகரிகத்தை வெளிக்கொணரும் வகையில் அந்த ஆற்றின் இருபுறங்களிலும் உள்ள தொன்மை வாய்ந்த பகுதிகளைக் கண்டறிய விரிவான களஆய்வு மேற்கொள்ளப்படும்.
மாநில அரசின் பரிந்துரைப்படி மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிலைக் குழுவின் அனுமதி பெற்ற பிறகு வரும் ஜனவரியில் தொல்லியல் அகழாய்வுப் பணிகளும், களஆய்வுகளும் தொடங்கப்பட உள்ளன என்று உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.