தொகுதி மக்களோடு திமுக எம்.பி.க்கள் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். பொருளாளர் துரைமுருகன், நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் கூட்டத்துக்கு முன்னிலை வகித்தனர். நாடாளுமன்றத் திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், பழநிமாணிக்கம், ஆ.ராசா, கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா உள்பட திமுக எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திமுக எம்.பி.க்கள் தொகுதி பக்கமே வரவில்லை என்ற நிலை இருக்கக் கூடாது. அனைவரும் தொகுதிக்குச் சென்று நன்றி தெரிவிக்க வேண்டும். தொகுதி மக்களோடு எப்போதும் தொடர்பில் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினார்.
மேலும், நாடாளுமன்றக் குழுக்களில் திமுக உறுப்பினர்களை இடம்பெறச் செய்வதில் பாரபட்சமான அணுகுமுறையைத் திமுகவின் மூத்த உறுப்பினர்களே கடைப்பிடிப்பதாக, மு.க.ஸ்டாலினுக்குப் புகார் வந்திருந்தது. அது குறித்தும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது: திமுகவின் தலைவராக நானும், பொருளாராக துரைமுருகனும் பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். என்னைப் பத்திரிகைகள் பாராட்டி எழுதி இருக்கின்றன. சிலர் விமர்சித்தும் எழுதி இருக்கின்றனர். சிலர் அறிவுப்பூர்வமான கருத்துகளையும் யோசனைகளையும் எனக்குச் சொல்லி இருக்கின்றனர்.
அவற்றையெல்லாம் நான் உள்வாங்கிக் கொண்டு, நிச்சயமாக என்னுடைய கடமையை ஆற்றுவேன். சோதனைகளை, சாதனைகளையெல்லாம் நான் எடை போட்டுப் பார்ப்பதில்லை. எப்படி எங்களை கருணாநிதி வழி நடத்திக் காட்டி இருக்கிறாரோ, அந்த வழியில் நின்று சோதனைகளைத் துணிவோடு சந்திப்போம் என்றார்.