தமிழ்நாடு

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

30th Aug 2019 01:36 AM

ADVERTISEMENT


தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

 தேனி - கம்பம் சாலையில் தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள தற்காலிக இடத்தில் தேனி அரசு சட்டக் கல்லூரி தொடக்க விழா தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:

கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் தனி மனித ஆட்சியை விட சட்டத்தின் ஆட்சியே மேலானது என்றார். தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் தற்போதும் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது.   சென்னையில் கடந்த 1891-ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1974 -இல் மதுரையில் அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. கடந்த 1979-80 -இல் திருச்சி, கோவை ஆகிய இடங்களில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அரசு சட்டக் கல்லூரிகளை திறந்தார். கடந்த 2012 -இல் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறுவினார். இந்த சட்டப் பள்ளி கடந்த 2018 -இல் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகமாக மாறியது.

தொடர்ந்து அதிமுக ஆட்சியில் கடந்த 2017 -இல் ராமநாதபுரம், விழுப்புரம், தருமபுரி ஆகிய இடங்களிலும்,  2018-19 -ஆம் கல்வியாண்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தற்போது சேலம், நாமக்கல், தேனி மாவட்டங்களில் அரசு சார்பில் சட்டக் கல்லூரிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. சட்டப் படிப்பு படித்தவர்களை மதிப்பு மிக்கவர்களாக சமூகம் பார்க்கிறது. எனவே சட்டம் படிப்பவர்கள் சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தேனி அரசு சட்டக் கல்லூரியில் தற்போது 5 ஆண்டு சட்டப் படிப்பு மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்பில் தலா 80 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர் என்றார்.

ADVERTISEMENT

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியது:   தமிழகத்தில் 3 மாவட்டங்களில் புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேனி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கருதியதால், இங்கு புதிய சட்டக் கல்லூரி  அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தான் சட்டக் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் தொடங்கப்பட்டுள்ளன. சட்டக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, உலகத் தரம் வாய்ந்தவையாக உருவாக்க வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நோக்கம்.
அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள 186 பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், தற்போது 94 உதவிப் பேராசியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சட்டம் மற்றும் சட்டம் தொடர்புடைய பாடப் பிரிவுகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு தென் மாநிலங்களிலேயே முதலாவதாக தமிழகத்தில் சென்னை, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என்றார்.

விழாவுக்கு தேனி மக்களவை உறுப்பினர் ப. ரவீந்திரநாத்குமார், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன், சட்டக் கல்வி இயக்குநர் நா.சு. சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வன அலுவலர் எஸ். கௌதம், மேகமலை வன உயிரின காப்பாளர் போஸ்லின் சச்சின் துக்காராம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச. கந்தசாமி, மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத் தலைவர் ஓ.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT