தமிழ்நாடு

தண்ணீர் வராததால் வாய்க்காலில் கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

30th Aug 2019 01:57 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணை திறக்கப்பட்டு 15 நாள்களுக்கு மேலாகியும் தண்ணீர் வராததால், தஞ்சாவூர் அருகே வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தஞ்சாவூர் அருகே மேலத்திருப்பூந்துருத்தியில் உள்ள கோரை வாய்க்காலில் இதுவரை தூர்வாரும் பணி நடைபெறாததுடன், தண்ணீரும் வந்து சேரவில்லை. இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏந்தி சென்று கோரை வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் துணைச் செயலர் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் தெரிவித்தது: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக ஆக. 13-ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணை திறந்து 15 நாள்களுக்கு மேலாகியும் இன்னும் கல்லணை அருகே தலைப்புப் பகுதியில் உள்ள வாய்க்கால்களுக்குத் தண்ணீர் வரவில்லை. தற்போது,  சாகுபடியைத் தொடங்குவதற்கேற்ற சாதகமான பருவநிலை உள்ளது. மேட்டூர் அணையிலும் போதுமான அளவுக்குத் தண்ணீர் இருக்கிறது. இந்த சூழலில், மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கன அடி வீதம் மட்டுமே நீர் திறந்துவிடப்படுவதால், தலைப்புப் பகுதிக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. மேலத்திருப்பூந்துருத்தி கிராமத்தில் உள்ள கோரை வாய்க்காலில் 4 கி.மீ. தொலைவுக்கு தூர்வாருவதற்காக ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்தப் பணியும் நடைபெறவில்லை.
இதேபோல, பல இடங்களில் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. நீர் மேலாண்மையை மாவட்ட நிர்வாகம் மிக மோசமாகக் கடைப்பிடித்து வருகிறது. இதனால், நீண்ட கால விதை நெல் ரகங்களை விதைக்க முடியவில்லை. எனவே, மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு குறைந்தது 20,000 கன அடி  தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றார் சுகுமாரன். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT