வாழ்வியல் நெறிமுறைகளை அறிய மாணவர்கள் கம்ப ராமாயணத்தைப் படிக்க வேண்டும் என மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் தெ.ஞானசுந்தரம் வலியுறுத்தினார்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாணவர் கம்பர் கழகத்தின் ஒன்பதாம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் தெ.ஞானசுந்தரம் பேசியது:
கம்ப ராமாயணம் ஒரு வாழ்வியல் காவியம். இலக்கணம், இலக்கியம், வாழ்வியல் நெறிமுறைகளை கம்ப ராமாயணம் மூலம் உலகிற்குத் தந்தவர் கம்பர். பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கம்பராமாயணம் கற்றுத் தர வேண்டும். அது அவர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்றார் அவர்.
தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்: கம்ப ராமாயணம் தொடர்பாக நடத்தப்பட்ட விநாடி-வினா, பாடல் ஒப்பித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், போட்டிகளை ஒருங்கிணைத்த ஆசிரியர்கள், புரவலர்களுக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பரிசுகளை வழங்கி பேசியது:
இளைய தலைமுறைக்கு இலக்கியத்தை எடுத்துச் செல்லும் அளப்பரிய பணியைக் கம்பன் கழகம்தான் செய்ய முடியும். கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம் என்று கம்பன் கழகங்கள் ஆற்றும் தமிழ்ப்பணி நிகரற்றது. மாணவர்களைக் கம்பனை ரசித்துப் படித்துப் போட்டிகளில் பங்கேற்க வைக்கும் மிகப் பெரிய சேவையில் குரோம்பேட்டை மாணவர் கம்பன் கழகம் ஈடுபட்டிருக்கிறது.
அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு கம்பனையும், கம்ப ராமாயணத்தையும் கொண்டு செல்வதற்கான இதுபோன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது பாராட்டுக்குரியது. கம்ப ராமாயணத்தில் தித்திக்காத இடமே இல்லை. பலாப் பழத்தில் ஒவ்வொரு சுளையும் இனிப்பதுபோல அதன் ஒவ்வொரு பாடலும் இனிமையானவை, ரசனைக்குரியவை. ரசனை மிகுந்த வாழ்க்கையை வாழ விரும்பினால் கம்ப ராமாயணத்தை அவசியம் வாசிக்க வேண்டும்.
உலக இலக்கியங்கள் அழகியலுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பவை. ஆனால், இந்திய இலக்கியங்கள், குறிப்பாக தமிழ் இலக்கியங்கள், மனித உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தன்னிகரற்று விளங்குகின்றன. சங்க இலக்கியங்களும், சிலம்பும், கம்பகாதையும் தொட்டுக் காட்டும் ரசனைக்குரிய மென்மையான உணர்வுக்கு நிகரான கற்பனைகளை, உலக இலக்கியங்கள் அனைத்தையும் தேடிப் பார்த்தாலும் காணக் கிடைக்காது.
திருவள்ளுவர், பாரதியார், ஒளவையாரின் கருத்துகள் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதைப் படித்தவர்கள் வாழ்க்கையில் எந்தவொரு இடத்திலும் நிலை தடுமாறாமல் வாழ முடியும் என்றார்.
விழாவையொட்டி கம்ப ராமாயணம் குறித்த சொல்லரங்கம், இசை அரங்கம், பட்டிமன்றம், நாட்டிய அரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர் கம்பர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மாணவர் கம்பர் கழகத்தின் செயலர் பத்மா மோகன், புரவலர்கள் என்.ஆர்.வெங்கடேஸ்வரன், வை.தா.ர.மூர்த்தி, இணைச் செயலர்கள் கோ.மணி, ரேகா மணி, உரத்த சிந்தனை ஆசிரியர் உதயம் ராம், அம்பத்தூர் கம்பன் கழகத்தின் தலைவர் பழ.பழனியப்பன், பேராசிரியர் சரஸ்வதி ராமநாதன், ராமேஸ்வரம் கம்பன் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கோடூர் ரமணி சாஸ்திரி, எழுத்தாளர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், புதுகைத் தென்றல் ஆசிரியர் புதுகை தர்மராஜ், பேராசிரியர் உலகநாயகி பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.