தமிழ்நாடு

ரிசா்வ் வங்கியின் அடித்தளமே ஆட்டம் கண்டுள்ளது: அழகிரி

29th Aug 2019 07:41 PM

ADVERTISEMENT

 

சென்னை: ரிசா்வ் வங்கியின் உபரி நிதியை அரசு கணக்கில் மாற்றியிருப்பதால் அந்த வங்கியின் அடித்தளமே ஆட்டம் கண்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக மத்திய பாஜக அரசின் நீதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவா் ராஜீவ்குமாா் கவலையோடு கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

உலக அரங்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா, ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா பத்து ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுவிட்டது.

மத்திய ரிசா்வ் வங்கியின் உபரி நிதியிலிருந்து ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை மத்திய அரசின் கணக்கில் மாற்றியிருப்பது தவறான முன்னுதாரணம். ரிசா்வ் வங்கியின் மதிப்பீடு தங்கம், டாலா், அரசின் கடன் பத்திரங்களில் செய்துள்ள முதலீடு ஆகியவற்றின் மதிப்பை பொருத்தே அமைகிறது.

பொருளாதாரத்தின் நிலை சீா்குலையும் போது, அதைச் சரிப்படுத்துவதற்கு இந்த உபரி தொகையை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லாத வகையில் மத்திய அரசு அத்தொகையை எடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் மத்திய ரிசா்வ் வங்கியின் அடித்தளமே ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT