இந்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது தவறான முன்னுதாரணம் என்று திமுக மாநில மகளிரணி செயலரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கூறினார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி: கடந்த 45 ஆண்டுகளாக இல்லாத அளவு இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சியைப் பார்க்க முடிகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் மக்களை பாதித்துள்ளது. இதை சரிசெய்ய மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. கடந்த முறை உலக அளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போதும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அப்போதைய மத்திய அரசால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இந்திய பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொள்ளாமல், திட்டங்களில் தொலைநோக்குப் பார்வை இல்லாமல் ஆட்சி செய்து வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை தேவையில்லாமல் பயன்படுத்திய பல்வேறு நாடுகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளதை கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. எனவே, ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்துவது மிகப் பெரிய பிரச்னை ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கும். தமிழகத்தில் பல பொருளாதார மாநாடுகளை நடத்தி, ஒன்றும் செய்ய முடியாத முதல்வர் வெளிநாட்டுக்கு சென்று என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் அவர்.