தமிழ்நாடு

புதிய மாவட்டங்கள் பிரிப்பு: இன்றும், நாளையும் கருத்து கேட்புக் கூட்டம்

29th Aug 2019 08:03 AM | வேலூர்

ADVERTISEMENT

திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்கள் உருவாக்குவது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளன. இக்கூட்டத்தில் பேசுபவர்கள் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலூர் மாவட்டத்தைப் பிரித்து கூடுதலாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இதில், திருப்பத்தூர் மாவட்டம் தோற்றுவிப்பது தொடர்பான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கும், வாணியம்பாடி சின்னக்கல்லுபள்ளி ஜெயின் மகளிர் கல்லூரி கலையரங்கில் மாலை 3.30 மணிக்கும் நடைபெற உள்ளது.இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் தோற்றுவிப்பது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் வாலாஜாபேட்டை அருகே  மேல்விசாரத்திலுள்ள அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரி கலையரங்கில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கும் நடைபெற உள்ளது.  
இவ்விரு கூட்டங்களிலும் கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான கே.சத்தியகோபால் பங்கேற்று பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிய உள்ளார்.
இக்கூட்டங்களில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், வணிக அமைப்புகள் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். மனு அளிப்போர் வேலூர் மாவட்டத்தின் எந்தவொரு இடத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட்டத்தில் பங்கேற்று மனு அளிக்கலாம். அவர்கள் கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு மனுக்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட மனுக்கள் மட்டுமே பெறப்படும். தங்கள் கோரிக்கைகளை பேச விரும்பும் நபர்கள் தங்கள் பெயர், முகவரியை கூட்டம் நடக்கும் அரங்குக்கு வெளியே முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு பிரத்யேக டோக்கன் வழங்கப்படும். அவர்கள் மட்டுமே கூட்டத்தில் பேச அனுமதிக்கப்படுவர். வாய்மொழியாக அளிக்கப்படும் எந்தவொரு கோரிக்கையும் ஏற்கப்படமாட்டாது. எழுத்துப்பூர்வமாக அளிக்கப்படும் கோரிக்கை மட்டுமே ஏற்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT