மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து தில்லியில் போராட்டம் நடத்துவது என கட்சியின் தேசிய அரசியல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய அரசியல் ஆலோசனைக் குழு கூட்டம் கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கே.எம்.காதர் மொகிதீன் தலைமை வகித்தார். தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி எம்.பி. உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், மத்தியில் பாஜக அரசு, பொறுப்பேற்ற நாள் முதல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு மாறாக, ஜனநாயக மரபுகளுக்கு எதிராக, சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதைக் கண்டித்து, அச்சமில்லா இந்தியா, அனைவருக்குமான இந்தியா என்ற முழக்கத்தை அறிவிப்பு செய்து தில்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது. அங்கு கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.