நடிகர் சங்க கட்டடம் கட்டப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அளவிலான பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்துக்கு பல கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டடத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கக் கட்டடம் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்படவில்லை என வழக்குரைஞர் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார். நடிகர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கிருஷ்ணா ரவீந்திரன், சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் தான் நடிகர் சங்க கட்டடம் கட்டப்படுவதாகவும், பொதுப்பாதையை ஆக்கிரமிக்கவில்லை எனக்கூறி அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்தார். இதனையடுத்து நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் சங்கம் கட்டப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.