தமிழ்நாடு

இந்தியாவின் பொருளாதாரம் முற்றிலும் சரிந்துள்ளது: கே.எஸ்.அழகிரி

29th Aug 2019 01:40 AM

ADVERTISEMENT


இந்தியாவின் பொருளாதாரம் முற்றிலும் சரிந்துள்ளது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக, அவர் புதன்கிழமை சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: 
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது நடவடிக்கை எல்லை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது.  அவருக்கு மன அழுத்தத்தைத் தர வேண்டியதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  உண்மையை முற்றிலும் மறைக்க முயல்கிறார்கள். ப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்தும் நேரடி விசாரணையை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்ய வேண்டும். 
இந்தியாவின் பொருளாதாரம் முற்றிலும் சரிந்துள்ளது.  ஆட்டோமொபைல் தொழில் துறையில் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.  மோடியிடம் பொருளாதார நிபுணர்கள் இல்லை.  இருந்தாலும், அவர்களின் ஆலோசனையை கேட்க மோடி தயாராக இல்லை.  மத்திய அரசு இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பதை வெள்ளை அறிக்கையாக  கொடுக்க வேண்டும். 
முதல்வர் வெளிநாட்டுப் பயணம்,  உடல்நலக் குறைவாக இருக்கும் போது தமது அமைச்சரவையில் உள்ள மற்றொருவருக்கு பொறுப்புகள் கொடுக்க வேண்டும்.  ஆனால், அவரது பொறுப்பை யாருக்கும் வழங்காமல் சென்றுள்ளார். காஷ்மீர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி, அவர்களது நம்பிக்கையை இழந்துள்ளோம்.  
காஷ்மீரில் உள்ள எந்த ஒரு மாவட்டமும்  தீவிரவாதிகள் கையில் இல்லை. இந்தியாவின் கையில்தான் உள்ளது. இதற்கு முன் காஷ்மீரில் ஒரு சதவீதம் மட்டுமே தீவிரவாதிகள் இருந்தனர்.  தற்போது காஷ்மீரில் உள்ள அனைத்து மக்களும் நமக்கு எதிராக உள்ளனர்.  இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொண்டவர்கள்  எல்லாம் தற்போது சிறையில் உள்ளனர். நேரு இல்லாவிட்டால் காஷ்மீர் இந்தியாவுடன் இருந்திருக்காது. 
 இந்த தேசத்தை காங்கிரஸ் அற்புதமாக அமைத்தது.  ஆனால், தற்போது பாஜக அரசு சீர்குலைத்து விட்டது.  சேலம் உருக்காலை ஏற்கெனவே லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.  தனியாருக்குக் கொடுக்கக் கூடாது என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும்.  எந்த ஒரு திட்டத்தையும் விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் செயல்படுத்துவதுதான் சரியாக இருக்கும் என்றார்.
பேட்டியின்போது,  தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் ஆர்.மோகன் குமாரமங்கலம்,  மாநகர மாவட்டத் தலைவர் ஜெயப்பிரகாஷ், கிழக்கு மாவட்டத் தலைவர் அர்த்தநாரி,  ஈரோடு மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுக் குழு உறுப்பினர் முருகேசன்,  ஜெயராமன், மெடிக்கல் பிரபு மகிளா காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சாரதாதேவி,  நிர்வாகி மெடிக்கல் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT