வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி செப்.3 -ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள வத்திபட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதல்வரின் வெளிநாடு பயணம், தொழில் முதலீட்டாளர்களை எந்த அளவுக்கு ஈர்க்கும் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். தண்ணீர் பிரச்னை, அரசியல் நெருக்கடி, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தமிழகம் தொழில் வளத்தில் பின்தங்கியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த பிறகு அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள சிமென்ட் சிலைக்கு மாற்றாக வெண்கல சிலை அமைக்க வேண்டும். அங்கு சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் செப். 3-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றார்.