ரயில்வேதுறை தனியார் மயமாவதை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என திமுக மாநிலங்களவை உறுப்பினரும், தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலருமான எம்.சண்முகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து நிதித்துறை தடுமாறி வருகிறது. கடந்த ஜூன் மாதம் ரயில்வேதுறையில் சித்தரஞ்சன், ஐசிஎஃப், பெங்களூரு, வாராணசி, பாட்டியாலா உள்ளிட்ட 7 அரசு உற்பத்தி நிறுவனங்கள், அதைச்சார்ந்து காணப்படும் பொன்மலை உள்ளிட்ட 44 ரயில்வே பராமரிப்பு பணிமனைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதை எதிர்த்து பல்வேறு ரயில்வே தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
ரயில்வே துறை தனியார் வசமானால் நிச்சயம் நஷ்டத்தை சந்திக்கும். பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும். எனவே, ரயில்வே துறை தனியார் வசம் என்பதை ஒருபோதும் ஏற்கமாட்டோம். இந்த நிலைப்பாட்டை அரசு கைவிடவேண்டும் என்றார்.
இதுகுறித்து இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கத் தலைவர் எம்.சண்முகம் கூறுகையில், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு சுமார் 44 ஆயிரம் கி.மீ. கொண்ட ரயில்பாதையை பிரிட்டிஷ் அரசு நிர்வகித்தது. அதில், தனியாரை விட அரசு நிர்வாகம் சிறந்ததாக இருந்தது. இதனால், ரயில்வே துறை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்க முடிவு செய்தது. நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகும், ரயில்வே, ராணுவம், அணுசக்தி ஆகிய 3 முக்கிய துறைகளும் அரசே ஏற்று நிர்வகிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என பிரிட்டிஷ் அரசு பரிந்துரை செய்தது. அதன்பிறகு, பல்வேறு தனியார் துறைகள் தொடங்க அரசு அனுமதித்தாலும், குறிப்பிட்ட 3 துறைகள் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன.
ஆனால், பின்பு சில நிர்வாக காரணங்களால் ரயில்வேயின் சில பிரிவுகள் தனியார் வசம் ஒப்படைத்ததால் இன்றளவும் பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகிறது.
இந்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ரயில்வே துறையின் உற்பத்தி பிரிவுகள், பராமரிப்பு பணிமனைகளை தனியார் வசம் ஒப்படைத்தால் அதிகம் நஷ்டம் ஏற்படும். சுமார் 8 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். தொழில் முன்னேற்றம், வேலைவாய்ப்பு இருக்காது. ரயில் கட்டணம் உயரும். எனவே, பொதுத்துறை நிறுவனங்களை ஒருபோதும் தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது. தற்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்றார்.